உலகின் புகழ்பெற்ற 150 இசைக்கலைஞர்களிடம் அவர்கள் கேட்டதிலேயே மிகச்சிறந்த 20 சிம்பொனி இசைகளை வரிசைப்படுத்தும் படி ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை கேட்டது. பீத்தோவனின் பெயர் எல்லாவற்றிலும் முதன்மையான இடத்தைத் தக்கவைத்தது. அரசியல் ரீதியாக உலகம் அமைதியிழந்து காணப்பட்ட தருணத்தில் தான் “ஹீரோயிக்” என்னும் பீத்தோவனின் பிரம்மாண்டமான படைப்பு வெளியாகியது. மேலும் அந்த தருணத்தில்தான் பீத்தோவனின் கேட்கும் திறனும் குறையத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதாபிமானம், துணிச்சலான வாழ்க்கைப் போராட்டம் ஆகியவைகளை பிரதிபலித்த இந்த இசையில் உணர்வுகள் பொங்கியது. உச்சகட்ட மகிழ்ச்சி, சோகம், வெற்றிக்களிப்பு என்று உணர்வுகளின் ஊடாய் பயணித்த பீத்தோவனின் மூன்றாம் மாபெரும் சிம்பொனி இசை, மனிதனுடைய ஆவிக்கு கிடைத்த பரிசு.
பவுலின் முதலாம் கொரிந்திய நிருபமும் இதே காரணங்களுக்காக நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு இசையாய் அல்லாமல், வார்த்தைகளாகிய அவைகள், ஆசீர்வாதத்துடன் துவங்கி (1:4-9), ஆத்துமாவை உடைக்கும் சோகத்தினூடாய் கடந்து (11:13-22), வரம்பெற்ற தேவ மனிதர்கள் அவைகளை சகமனிதர்களுக்காகவும், தேவ நாம மகிமைக்காகவும் பயன்படுத்தத் தூண்டும் ஆலோசனையோடு நிறைவடைகிறது (12:6-7).
நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுதலே தேவனுடைய ஆவிக்கு நாம் கொடுக்கும் காணிக்கை. கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பை உணருவதற்கு பவுல் நம்மை உற்சாகப்படுத்த, நாம் பிதாவாகிய தேவனால் அழைக்கப்பட்டு, குமாரனால் வழிநடத்தப்பட்டு, அவருடைய ஆவியினாலே ஏவப்படுகிறோம் என்பதை காண உதவுகிறார். ஏதோ ஒரு சத்தத்தை பிறப்பிப்பதற்கு அல்ல, மாறாக, உலகின் மாபெரும் சிம்பொனி படைப்பை நம்மிலிருந்து பிறப்பிக்கும் பொருட்டு அது நம்மை தூண்டுகிறது.
உங்களுடைய வாழ்க்கையில் முரண்பாடான இசையை எங்கு கேட்கிறீர்கள்? அன்பின் சிம்பொனி இசையை எங்கு கேட்கிறீர்கள்?
தகப்பனே, உம்முடைய குமாரனை நோக்கிப் பார்த்து, உம்முடைய ஆவியை சார்ந்துகொண்டு, என்னைப்போன்று வெற்று ஓசை எழுப்பக்கூடிய நபரிடத்திலிருந்து மற்றவர்களோடு நான் எப்படியிருக்கமுடியும் என்பதை அறிய என்னை பெலப்படுத்தும்.