மார்த்தா, ஆரம்பப் பள்ளியொன்றில் உதவி ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் பணம் சேமித்து வைத்து, அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தருவது அவரது வழக்கம். இரத்தப்புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த மார்த்தாவின் சேவையைப் பாரட்டி எங்கள் பள்ளியில் அவளுக்கு நினைவுநாள் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூங்கொத்துகளோடு சேர்த்து நூற்றுக்கணக்கான புத்தாடைகளை ஏழைப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாய் வழங்கினர். மார்த்தாவின் தியாகமான சேவையைக் குறித்தும் மற்றவர்களை ஊக்கப்படுத்திய அவரது கருணை உள்ளத்தைக் குறித்தும் பல்வேறு சாட்சிகள் பகிரப்பட்டது. அவரின் சேவையை மதித்த அவரது சக ஆசிரியர்கள், அவள் செய்து வந்த அந்த தொண்டை, அவளது மறைவுக்குப் பின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்துகொண்டு வருகின்றனர். மார்த்தா விட்டுச்சென்ற இந்த கருணை உள்ளம், தேவையுள்ளவர்களுக்கு உதவ இன்னும் பலரை ஊக்குவிக்கிறது.

அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்” செய்து வந்த தொற்காள் என்னும் பெண்ணைக்குறித்து லூக்கா பதிவு செய்கிறார் (வச. 39). அவள் வியாதிப்பட்டு மரித்துவிடுகிறாள். ஆனால் அங்கிருந்த பேதுருவை மக்கள் வருந்தி அழைக்கின்றனர். அங்கிருந்த விதவைகள் அனைவரும் அழுது, தொற்காள் எவ்வாறு சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்தாள் என்பதை பேதுருவுக்கு தெரிவித்தனர் (வச. 39). பேதுரு தொற்காளை உயிரோடு எழும்பப்பண்ணுகிறார். “இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வச. 42). எளியவர்களுக்கு உதவும் தொற்காளின் இந்த சேவை மனப்பான்மை மற்றவர்களின் உள்ளத்தைத் தொட்டது, அத்துடன், அன்போடு கூடிய தயாள குணத்தின் வலிமையை மற்றவர்களுக்கு தெளிவாய் வெளிப்படுத்தியது.