குழந்தையில்லாத தம்பதியினருக்காக ஒழுங்குசெய்யப்பட்ட பொதுவான கருத்தரங்கில் நான் பேச வேண்டியிருந்தது. அதில் பங்குபெற்ற அநேகர் குழந்தையில்லாமையால், எதிர்காலத்தைக் குறித்து சோர்ந்துபோயிருந்தார்கள். அந்த பாதையில் நடந்த அனுபவம் எனக்கும் இருந்ததால், அவர்களை உற்சாகப்படுத்த நினைத்தேன். “பெற்றோராக முடியவில்லையென்றாலும் உங்களால் அழகான வாழ்க்கை வாழமுடியும்” என்றும், “நீங்கள் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள்; உங்களைக் குறித்த புதிய நோக்கத்தை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்” என்றும் அவர்களை உற்சாகப்படுத்தினேன்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பெண் கண்ணீரோடு என்னிடத்திற்கு வந்து, நன்றி சொன்னாள். “குழந்தையின்மையால் சோர்ந்துபோயிருந்த நான் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டவள் என்பதை இன்று அறிந்தது ஆசீர்வாதமாய் இருந்தது” என்றாள். “நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டவரா” என்று கேட்டேன். “வெகுநாட்களுக்கு முன்பு தேவனை விட்டு பின்வாங்கிப்போனேன்” என்ற அவள், “நான் மீண்டும் அந்த உறவைப் புதுப்பிக்க வேண்டும்” என்று தீர்மானம் எடுத்தாள்.
இதுபோன்ற தருணங்களில் சுவிசேஷத்தின் மேன்மை என்ன என்று புரிந்துகொள்ளமுடிகிறது. “அம்மா” “அப்பா” ஸ்தானத்தை அடைவது சிலருக்கு கடினம். நம் வேலை ஸ்தலங்களில் கொடுக்கப்படும் பதவி அந்தஸ்தையும் அவ்வப்போது நாம் இழக்கநேரிடும். ஆனால் இயேசு நமக்குக் கொடுக்கும் “பிரியமான பிள்ளைகள்” என்னும் ஸ்தானத்தை யாரும் நம்மிடத்திலிருந்து பறிக்கமுடியாது (எபேசியர் 5:1). அந்த அங்கீகாரத்தோடு இந்த உலகம் கொடுக்கும் எல்லா ஸ்தானங்களுக்கும் மேலான அன்பின் பாதையிலே நாம் நடக்கமுடியும் (வச. 2).
மனிதர்கள் அனைவரும் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டுள்ளனர் (சங்கீதம் 139:14).இயேசுவை பின்பற்றுபவர்கள் அவருடைய பிள்ளைகளாய் மாறுகின்றனர். குழந்தையின்மையால் சோர்ந்திருந்த அந்த பெண், இந்த உலகம் கொடுப்பதைக்காட்டிலும் மேன்மையான ஸ்தானத்தையும் அங்கீகாரத்தையும் தேடிப் புறப்பட்டாள்.
சோர்ந்திருந்த யாரிடமாவது “நீங்கள் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய்” உண்டாக்கப்பட்டவர்கள் என்று சொல்ல விரும்புகிறீர்களா? தேவனுடைய பிள்ளைகளாகும் வாய்ப்பை யாரிடம் பகிரப் பேகிறீர்கள்?
தகப்பனே, வாழ்க்கையில் எல்லா நிறைவுக்கும் நீரே காரணம். அதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.