ஆப்ரே தன் வயதான அப்பாவிற்காக தோலினால் தைக்கப்பட்ட ஒரு மேலுறையை வாங்கினாள். ஆனால் அதை அணிவதற்குள் அவர் இறந்துவிட்டார். எனவே அந்த தோல் மேலுறையின் பாக்கெட்டில் ஒரு உற்சாகப்படுத்தும் வாக்கியம் எழுதப்பட்ட துண்டுகாகிதத்தையும், அத்துடன் 20 டாலர்கள் பணத்தையும் வைத்து, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டாள்.
சமாதானமில்லாத தன் குடும்பச் சூழ்நிலையை தாங்கிக்கொள்ள முடியாத கெல்லி, தன் வீட்டை விட்டு வெளியேறினான். போகும்போது அவன் மேலுறையை எடுக்க மறந்துவிட்டான். அவனுக்கு தெரிந்த ஒரே இடம், அவனுக்காய் ஜெபிக்கும் அவனுடைய பாட்டி வீடு. 90 மைல்கள் தூரத்திலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். குளிரின் தாக்கம் அதிகமாய் இருந்ததால், அவனுக்கு ஒரு மேலுறையை வாங்க வேண்டும் என்று பாட்டி சொன்னார்கள். அருகிலிருந்த மிஷன் கடையை நாடி, கெல்லி தனக்கு பிடித்த ஒரு மேலுறையைத் தேர்ந்தெடுத்தான். அதின் பாக்கெட்டில் கைவிட்டுப்பார்த்த கெல்லியின் கைக்கு, 20 டாலர்கள் பணமும் ஆப்ரேயின் உற்சாக வார்த்தை எழுதப்பட்டிருந்த துண்டு காகிதமும் சிக்கியது.
தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாகவே யாக்கோபும் தன்னுடைய வீட்டை விட்டு வெறியேறினான் (ஆதியாகமம் 27:41-45). இரவில் ஓரிடத்தில் தங்கி, தூங்கும்போது, தேவன் சொப்பனத்தில் அவனுக்கு வெளிப்பட்டு, “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து” நடத்துவேன் என்று வாக்குப்பண்ணுகிறார். உடனே யாக்கோபு, “தேவன் என்னோடே இருந்து… உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்(தால்)… கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்” என்று பொருத்தனை செய்கிறான் (வச. 20-21).
யாக்கோபு அந்த இடத்தில் ஒரு கல்லை நாட்டி, அந்த இடத்திற்கு “தேவனுடைய வீடு” என்று பேரிட்டான் (வச. 22). கெல்லி, ஆப்ரேயின் துண்டுகாகிதத்தையும் 20 டாலர்கள் பணத்தையும் நினைவுகூரும்பொருட்டு, போன இடத்திற்கெல்லாம் கொண்டு சென்றான். இந்த இரண்டுமே, நாம் போகுமிடத்திலெல்லாம் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதை நினைவுகூறவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
வாழ்க்கையின் பாதையில் நீங்கள் ஓடும்போது, எங்கு ஓடுவீர்கள்? யாரிடமாய் திரும்புவீர்கள்? உங்கள் வாழ்க்கையில் தேவன் இருக்கிறார் என்பதை எவ்வாறு நினைவுகூறுகிறீர்கள்?
அப்பா, எப்போதும் உம்மை நாடியே நான் ஓடுகிறேன். உம்மிடமாய் திரும்ப எனக்கு உதவிசெய்யும்.