சரித்திரத்தில் புகழ்பெற்ற லைட் பிரிகேட் யுத்தத்தின் போது, “டிரம்மர் பாய்” என்று பெயர்கொண்ட காயப்பட்ட அந்த குதிரை 112 மலை ஏற்றங்களைக் கடந்து பிரிட்டிஷ் இராணுவ வீரனை யுத்தத்திற்கு சுமந்து வந்த பெருமைக்குரியது. அது இராணுவ படைத்தளபதி, லெப்டினன்ட் கலோனல் டி சலீஸின் குதிரை. திறமையுள்ள வீரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பதக்கம் அந்த குதிரைக்கும் கொடுக்கப்பட்டது. யுத்தத்தில் அவர்களின் படை ஜெயிக்கவில்லை என்றபோதிலும், குதிரைக்கு இந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இராணுவ வரலாற்றில் ஒரு குதிரைக்கு கிடைத்த இந்த அந்தஸ்து சர்ச்சையை கிளப்பினாலும், இன்றும் கொண்டாடப்படுகிறது.
இந்த சர்ச்சை பழம்பெரும் நீதிமொழியை நமக்கு நினைவுபடுத்துகிறது. “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதிமொழிகள் 21:31). வேதாகமம் இந்தக் கொள்கையை மிகத் தெளிவாய் உறுதிபடுத்துகிறது. “உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (உபாகமம் 20:4). மரணத்தின் பிடியிலிருந்தும், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று பவுல் குறிப்பிடுகிறார்.
இந்த உண்மையை அறிந்தவர்களாய், வாழ்க்கையின் கடினமான சவால்களை சந்திக்க நம்முடைய ஆயத்தங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம். ஒரு ஊழியத்தைத் துவங்குவதற்கு, படிப்போம், உழைப்போம், அதிகமாய் ஜெபிப்போம். ஒரு அழகான ஓவியத்தை உருவாக்குவதற்கு தேவையான திறமையை வளர்த்துக்கொள்வோம். மலையின் உச்சியை அடைவதற்கு தேவையான கருவிகளை ஆயத்தப்படுத்துவோம் ; நம்மையும் பலப்படுத்திக்கொள்வோம். நம்முடைய தரப்பில் ஆயத்தமாகிய பின், கிறிஸ்துவின் உறுதியான அன்பைச் சார்ந்து யுத்தத்தில் வெற்றிபெறுவோம்.
இப்போது எந்த யுத்தத்தைச் செய்ய அல்லது எந்த சவாலை சந்திக்க நீங்கள் ஆயத்தப்படுகிறீர்கள்? ஜெயம் கர்த்தருடையது என்றால் உங்கள் போராட்டத்தை சந்திக்க எதற்காய் ஆயத்தப்படுகிறீர்கள்?
பரமபிதாவே, வாழ்க்கையின் கடினமான போராட்டங்களை நான் சந்திக்கும்போது நீர் ஜெயமெடுக்கும்படி, என் உள்ளத்தை ஆயத்தப்படுத்த என்னை ஏவும்.