என்னுடைய சிநேகிதி மார்கே, வேதபாட வகுப்பில் டமியை சந்தித்தபோது, அவர்களுக்குள் சிலகாரியங்களில் ஒத்துப்போனதை அறிந்தாள். இருவரும் நண்பர்களாயினர். மார்கே தன் புது சிநேகிதியிடமிருந்து விலை மதிப்புள்ள ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டாள்.
டமி, இதற்கு முன்பாக வேதபாட வகுப்பிற்கு சென்றதில்லை. தேவன் பேசியதைக் கேட்ட அனுபவம் இல்லாததால், வேதபாட வகுப்பிலிருந்த ஒரு பெண், தேவன் தன்னோடு பேசினார் என்று சொன்னதைப் புரிந்துகொள்ள முடியாமல் திகைத்தாள்.
தேவன் பேசுவதைக் கேட்பதற்கு தீர்மானித்து, டமி செயலில் இறங்கினாள். அவள் மார்கேயிடம், “நான் ஒவ்வொருமுறை வேதாகமத்தை வாசிக்கும்போதும், ஒரு பழைய நாற்காலியை எனக்கு முன்பாக வைத்து, இயேசுவை வந்து அதில் அமரும்படி கேட்பேன்” என்று சொன்னாள். மேலும் தன்னைத் தொட்ட வேத வசனத்தை சுண்ணாம்பு கட்டியைக்கொண்டு அந்த நாற்காலியில் எழுதுவேன் என்றும் கூறியிருக்கிறாள். அது அவளுடைய விசேஷமான “இயேசு நாற்காலி.” வேதத்திலிருந்து அவளோடு தேவன் பேசிய செய்திகளால் அது நிறைந்திருந்தது.
மார்கே, “(இயேசு நாற்காலி) (டமியின்) வாழ்க்கையை மாற்றியது . வேதம் அவளுக்கு சொந்தமாய் மாறியபோது அவள் ஆவிக்குரிய வாழ்க்கை வளர்ச்சியடைந்தது” என்று கூறினாள்.
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார் (யோவ. 8:31-32). அவருடைய வார்த்தைகளை நாற்காலியில் எழுதுவதோ, மனப்பாடம் செய்வதோ, அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துவதோ, எப்படியாயினும் நாம் அவருடைய உபதேசத்தில் நிலைத்திருக்க பிரயாசப்படுவோம். கிறிஸ்துவின் உபதேசத்திலிருக்கும் ஞானமும் சத்தியமும் அவரில் வளரச்செய்து நம்மை முற்றிலும் விடுதலையாக்கும்.
வேதாகமத்தின் ஞானத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு நடைமுறையில் என்ன செய்யப்போகிறீர்கள்? வேதத்தை விளங்கிக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எந்தவிதத்தில் உதவுகிறார்?
தேவனே, வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஞானத்தைக் கொண்டு உம்மை இன்னும் நெருங்க எனக்கு உதவிசெய்யும். நான் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தவும் இயேசுவைப் போல இன்னும் அதிகமாய் வளரவும் உதவிசெய்யும்.