வெகுநாளாய் நாங்கள் போகாமல் இருந்த எங்கள் திருச்சபைக்கு மூன்று ஆண்டுகள் கழித்து நானும் எனது கணவரும் போகத் தீர்மானித்தோம். மக்கள் எங்களை எப்படி நடத்துவார்கள்? மறுபடியும் எங்களை எப்படி வரவேற்பார்கள்? எப்படி நேசிப்பார்கள்? சபையை விட்டுச் சென்றதை மன்னிப்பார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலே பதில் கிடைத்தது. சபைக்குள்ளே நாங்கள் நுழைந்தபோது, எங்கள் பெயர்கள் தொடர்ந்து எங்கள் காதுகளில் ஒலித்தது. “பாட்! டான்! உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றனர். மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் சிறுவர்களுக்காய் எழுதிய புத்தகமொன்றில், “வாசகர்களே, இந்த சோகமான உலகத்தில், நீங்கள் விரும்பும் நபர் உங்களை பேர்ச்சொல்லி அழைப்பதைக் காட்டிலும் இன்பம் வேறொன்றுமில்லை” என்கிறார்.
தேவன் அதேபோன்று ஒரு உறுதியை இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுத்துள்ளார். நாங்கள் தற்காலிகமாக வேறொரு திருச்சபையைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இஸ்ரவேலர்கள் தேவனை விட்டு விலகினார்கள். ஆனாலும் தேவன் அவர்களை மீண்டும் வரவேற்றார். அவர் ஏசாயா தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பி, “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன் ; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசாயா 43:1) என்று உறுதிகொடுத்தார்.
இந்த உலகத்தில் நாம் கண்டுகொள்ளப்படாதவர்களாய், பாராட்டப்படாதவர்களாய், கவனிக்கப்படாதவர்களாய் இருக்கலாம். ஆனால் தேவன் நம் ஒவ்வொருவரையும் பேர்பேராய் அறிந்திருக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்” (வச. 4) என்று வாக்களிக்கிறார். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (வச. 2). இது இஸ்ரவேலுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் அல்ல. இயேசு தன்னுடைய வாழ்க்கையையே நமக்காய் பலியாய் கொடுத்துள்ளார். அவருக்கு நம்முடைய பெயர்கள் தெரியும். ஏன்? அன்பில் நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.
தேவன் தன் ஜனத்தை ஏன் திரும்ப அழைத்தார்? உன் பெயர் அவருக்குத் தெரியும் என்பதை எந்த விதத்தில் உனக்கு வெளிப்படுத்தியுள்ளார்?
நான் உம்முடைய கைகளிலிருந்தும், ஐக்கியத்திலிருந்தும் விலகி செல்லும் போது இயேசுவே என்னை பெயர்ச்சொல்லி அழைத்து உம்முடைய வீட்டினுள் சேர்த்துக் கொள்ளும். நான் உம்முடையவனாய் இருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.