நேரிடப்போகிற ஒரு பெரிய ஆபத்தைக் குறித்த செய்தியை தொலைபேசி வாயிலாக கேள்விப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய வாகனத்தை இருட்டான இரயில் பாதையில் வேகமாய் செலுத்தி, அந்த இரயில் பாதையில் கார் சிக்கியிருந்த இருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார். வெகுவேகமாய் வந்த இரயிலானது அந்த காரை உடைத்து நொறுக்கியது அருகிலிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. “50லிருந்து 80 மைல் வேகத்தில்” அந்த இரயில் வந்தது என்று அந்த அதிகாரி அறிவித்தார். அந்த இரயில் காரை உடைத்து நொறுக்குவுதற்கு சற்று முன், சற்றும் யோசிக்காமல் அந்த காவல் அதிகாரி, காரில் சுயநினைவிழந்திருந்த நபரை வெளியே இழுத்து கனப்பொழுதில் அவரின் உயிரைக் காப்பாற்றினார்.
நம்பிக்கையிழக்கும் வாழ்க்கைத் தருணத்திலெல்லாம் தேவன் நம்மை விடுவிக்கிறவர் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கி, ஒடுக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்கள், தாங்கள் விடுவிக்கப்படுவது சாத்தியமேயில்லை என்று நினைத்தனர். யாத்திராகமத்தில் தேவன் அவர்களுக்கான நம்பிக்கையின் வார்த்தையைக் கொடுக்கிறார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து,” “அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன்,” “அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (3:7). தேவன் பார்ப்பது மட்டுமின்றி, கிரியையும் செய்கிறார். “அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க… இறங்கினேன்” (வச. 8) என்று கூறுகிறார். அதற்கேற்ப, தேவன் இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். இதுதான் தெய்வீக மீட்பு.
தேவன் இஸ்ரவேலை மீட்கும் இந்த சம்பவம், இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நமக்கு தேவனுடைய இருதயத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. தேவன் வந்து விடுவித்தாலொழிய வாய்ப்பே இல்லை என்று அழிவின் பாதையில் பயணிக்கும் நம்மில் பலருக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நம்முடைய சூழ்நிலைகள் சாத்தியமில்லாமல் தெரியலாம். அதிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவரான தேவனை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து, நம் இருதயத்தை அவரிடமாய் திருப்புவோம்.
உங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நம்பிக்கையிழந்து, தேவனுடைய மீட்பின் தேவையோடு இருக்கிறீர்கள்? இந்த பயத்தின் பள்ளத்தாக்கிலிருந்து தேவனிடத்தில் எப்படி நம்பிக்கை வைக்கப்போகிறீர்கள்?
தேவனே, நான் பிரச்சனையிலிருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவிசெய்யவில்லையென்றால், நான் நன்மையைக் காணமுடியாது. நீர் எனக்கு உதவி செய்வீரா? என்னை விடுவிப்பீரா?