யூரி ககரின் விண்வெளியில் பயணித்த முதல் மனிதரான பிறகு, அவர் ரஷ்ய கிராமப்புறங்களில் பாராசூட் பயணம் செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண் ஆரஞ்சு உடையணிந்த இந்த விண்வெளி வீரரைக் கண்டார். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்து இரண்டு பாராசூட்டுகளை இழுத்துச் சென்றுக்கொண்டிருந்தார். “நீங்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கிறீர்களா?” அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். “உண்மையில், நான் அப்படிதான் வந்தேன்,” என்று அவர் கூறினார்.
சோவியத் தலைவர்கள் இந்த வரலாற்று நிகழ்வை மார்க்க எதிர்ப்பு பிரச்சாரமாக மாற்றினர். “ககரின் விண்வெளிக்குச் சென்றார், ஆனால் அவர் அங்கு எந்த தேவனையும் காணவில்லை” என்று அவர்களின் பிரதமர் அறிவித்தார். (ககரின் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை.) சி.எஸ். லூயிஸ், “பூமியில் தேவனைக் காணாதவர்கள், அவரை விண்வெளியில் காண வாய்ப்பில்லை” என்கிறார்.
இந்த வாழ்க்கையில் தேவனைப் புறக்கணிப்பது பற்றி இயேசு எச்சரித்திருக்கிறார். அவர் இறந்த இரண்டு மனிதர்களின் உவமையை சொன்னார். தேவனுக்கு நேரம் கொடுக்கமுடியாமல் இருந்த ஒரு ஐசுவரியமுள்ள மனுஷன், விசுவாசத்தில் ஐசுவரியவானும் தரித்திரனுமான லாசரு (லூக்கா 16: 19-31). பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, ஐசுவரியவான் பூமியில் இருக்கும் தன் சகோதரர்களுக்காக ஆபிரகாமிடம் மன்றாடினான். “லாசருவை அனுப்புங்கள்” என்று ஆபிரகாமிடம் கெஞ்சினான். “மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்” (வச.27,30). ஆபிரகாம் பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிந்து: “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும் நம்பமாட்டார்கள்” (வச. 31).
ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் எழுதினார்: “பார்ப்பது என்றால் நம்புவது என்று அர்த்தமல்ல. நாம் எதை நம்புகிறோம் என்பதின் அடிப்படையில் தான் ஒன்றைப் பார்க்கிறோம்.”
தேவன் இருக்கிறார் என்பதையும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் குறித்து நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் அன்றாடத் தீர்மானங்களை உங்கள் நம்பிக்கைகள் எவ்வாறு பாதிக்கின்றன?
பிதாவே, இன்னும் உம்மை நம்பாதவர்களுக்காக இன்று ஜெபிக்கிறேன். உம்முடைய மென்மையான தொடுதலாலும் பரிசுத்த ஆவியின் அனபினாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளும்.