தங்களது குழந்தையை தத்தெடுத்ததை சட்டபூர்வமாய் உறுதிசெய்யும் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டைப் பெற்றபோது ஷெபாவும் அவளது கணவரும் மகிழ்ச்சியில் கண்கலங்கினர். இப்போதிலிருந்து மீனா எப்போதுமே அவர்களின் மகளாக இருப்பாள், என்றென்றும் அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பாள். ஷெபா இந்த சட்டரீதியான செயல்முறையை நடைமுறைப்படுத்தியபோது, இயேசுவின் குடும்பத்தில் அங்கமாகும்போது நடக்கும் “உண்மை பரிமாற்றத்தை” அவள் நினைத்துப் பார்த்தாள்: “இனி நாம் பாவம் மற்றும் முறிவின் பிறப்புரிமையினால் இழுக்கப்படாமல்,” தேவனுடைய பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டு, தேவனுடைய ராஜ்யத்திற்குள் முழு அதிகாரத்தோடு நுழைகிறோம் என்று அவள் கூறுகிறாள்.
அப்போஸ்தலன் பவுலின் நாட்களில், ஒரு ரோமானிய குடும்பம் ஒரு மகனைத் தத்தெடுத்தால், அவருடைய சட்டபூர்வமான நிலை முற்றிலும் மாறும். அவனது பழைய வாழ்க்கையிலிருந்த எந்தவொரு கடன்களும் ரத்து செய்யப்படும். மேலும், அவன் தனது புதிய குடும்பத்தின் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவான். இதே சலுகைகளை கிறிஸ்துவுக்குள் வரும் ரோம திருச்சபை விசுவாசிகளும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிவிக்க பவுல் விரும்பினார். இனி ஒருபோதும் அவர்கள் பாவத்திற்கும் கண்டனத்திற்கும் கட்டுப்பட்டவர்களல்ல. இப்போது அவர்கள் “ஆவியின் படி” நடத்தப்படுகிறார்கள் (ரோமர் 8:4). மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (வச.14-15). அவர்கள் பரலோகத்தின் குடியுரிமை பெறும்போது அவர்களின் சட்டரீதியான அங்கீகாரமும் மாறுகிறது.
நாம் இரட்சிக்கப்பட்டவர்களென்றால், நாமும் தேவனின் பிள்ளைகளாகவும் அவருடைய ராஜ்யத்தின் புத்திரர்களாகவும், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகிறோம். இயேசுவின் சிலுவை தியாகம் என்னும் பரிசின் மூலமாக நம்முடைய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. நாம் இனி பயத்திலோ அல்லது கண்டனத்திலோ வாழத் தேவையில்லை.
தேவனின் பிள்ளை என்ற உங்களுடைய இந்த அங்கீகாரம் உங்களுடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது? உங்கள் அங்கீகாரத்தின் இந்த அஸ்திபாரத்தை பெறுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
பிதாவாகிய தேவனே, நீர் என்னை என் தாயின் கருவில் உருவாக்கினீர். நீர் என்னை அறிந்திருக்கிறீர், நேசிக்கிறீர். நீர் என்னை எவ்வளவாக பாதுகாக்கிறீர் என்பதை ஒருபோதும் நான் சந்தேகிக்கக்கூடாது.