சோர்வுற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், காலை உணவிற்காக ஒரு உணவகத்தை நாடியபோது, இவர்கள் ஒரு கிடங்கின் தீயை எதிர்த்து ஒரு இரவு முழுவதும் போராடின வீரர்கள் என்பதை செய்தியின் மூலம் அங்கிருந்த பணியாளர் அறிந்துகொண்டார். தனது பாராட்டுக்களை தெரிவிக்க எண்ணி, அவர்களின் உணவு ரசீதில், “உங்கள் சிற்றுண்டி செலவை நான் ஏற்கிறேன். எல்லோரும் பயந்து ஓடக்கூடிய இடத்திற்கு விரைந்து ஓடி மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காய் நன்றி. நெருப்பினால் உற்சாகப்படுத்தப்பட்டு, தைரியத்தினால் உந்தப்பட்டு செயல்படும் நீங்கள், என்னே ஆச்சரியமான ஒரு முன்மாதிரி!” என்று எழுதினாராம்.  

பழைய ஏற்பாட்டில், மூன்று இளைஞர்களின் செயல்களில் தைரியத்தின் உதாரணத்தைக் காண்கிறோம்: சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ (தானியேல் 3). பாபிலோனிய ராஜாவின் சிலையை வணங்குவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, இந்த இளைஞர்கள் தைரியமாக அதை மறுத்ததின் மூலம் தேவன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினர். அவர்களின் தண்டனை அக்கினிச்சூளைக்குள் வீசப்பட வேண்டும் என்பதே. ஆனாலும் அந்த இளைஞர்கள் பின்வாங்கவில்லை: “நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை… பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை” (வச. 17-18).  

தேவன் அவர்களை மீட்டு, எரிகிற அந்த அக்கினியில் அவர்களோடே கூட உலாவினார் (வச.25-27). இன்று நம்முடைய தீ போன்ற சோதனைகளிலும், இக்கட்டிலும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்ற உறுதி நமக்கு இருக்கிறது. அவரால் கூடும்.