ஸ்காட்லாந்தில் ஷிண்ட்டி (ஹாக்கி போன்ற விளையாட்டு) விளையாட்டில் இங்கிலாந்து ராணியை சந்தித்த பிறகு, சில்வியா மற்றும் அவரது கணவர் தேநீருக்காக அரச குடும்பத்தினர் அவர்களை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற செய்தி அவர்களை வந்தடைந்தது. சில்வியா சுத்தம் செய்து தயார்படுத்தத் தொடங்கினார். அரச விருந்தினர்களுக்கு விருந்தளிப்பதில் பதட்டமாக இருந்தார். அவர்கள் வருவதற்குள் மேசை மீது வைக்க சில பூக்களை எடுத்துவர அவள் வெளியே சென்றாள், அவளுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உடனடியாக, அவர்தான் ராஜாதி ராஜா என்பதையும் அவர் ஒவ்வொரு நாளும் அவளுடன் இருக்கிறார் என்பதையும் தேவன் நினைவூட்டுவதை அவள் உணர்ந்தாள். உடனே அவள் சமாதானமாக உணர்ந்தாள், “மொத்தத்தில் எப்படியிருந்தாலும், இது ராணி மட்டுமே!” என்று எண்ணினாள்.
சில்வியா யோசித்தது சரிதான். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டது போல, “தேவன் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” (1 தீமோத்தேயு 6:15), அவரை பின்பற்றும் யாவரும் “தேவனுடைய புத்திரர்கள்” (கலாத்தியர் 3:26). நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறோம் (வச. 29). இனி நாம் பிரிவினைகளால் கட்டுப்பட்டவர்களல்ல – இனம் சமூக நிலை அல்லது பாலின வேறுபாடுகள் போன்றவை – “நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்” (வச. 28). நாமெல்லாரும் இராஜாவின் பிள்ளைகள்.

சில்வியாவும் அவரது கணவரும் ராணியுடன் ஒரு அற்புதமான உணவு விருந்தை அனுபவித்திருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜாதி ராஜா ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருக்கிறார் என்ற நினைப்பூட்டலை நான் விரும்புகிறேன். இயேசுவை முழுமனதுடன் விசுவாசிப்பவர்கள் (வச. 27) தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றறிந்து ஒற்றுமையில் வாழமுடியும்.

இந்த சத்தியத்தைப் பிடித்துக் கொள்வது இன்று நாம் வாழும் முறையை எவ்வாறு வடிவமைக்கும்?