பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான உணவகம் 45 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சமைத்து வரும் ஒரு குழம்பில் இருந்து சூப் ஒன்றை பரிமாறுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அது மீண்டும் மீண்டும் நிரப்பப்படுகிறது. ‘நிரந்தர குழம்பு’ என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை இடைக் காலத்திற்கும் முந்தையது. சில ‘எஞ்சியவை’ சில நாட்களுக்குப் பிறகு நன்றாக ருசிப்பது போல நீட்டிக்கப்பட்ட சமையல் நேரம் ஒன்றிணைந்து தனித்துவமான சுவைகளை உருவாக்குகின்றது. இந்த உணவகம் தாய்லாந்தில் மிகவும் சுவையான குழம்புக்கான பல விருதுகளை வென்றுள்ளது.
நல்ல விஷயங்கள் பெரும்பாலும் நேரம் எடுக்கும், ஆனால் நம் மனித இயல்பு பொறுமையுடன் போராடுகின்றது. “எவ்வளவு காலம்?” என்ற கேள்வி முழு வேதாகமத்திலும் வருகிறது. ஒரு தெளிவான உதாரணம் ஆபகூக் தீர்க்கதரிசியிடமிருந்து, அவர் தனது புத்தகத்தை இவ்வாறு தொடங்குகிறார். “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் நீர் கேளாமல் இருக்கிறீரே!” (ஆப. 1:2). ஆபகூக் (பெயரின் அர்த்தம் ‘மல்யுத்த வீரர்’) இரக்கமற்ற பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தின் படையெடுப்பு மூலம் தனது நாடு (யூதா) மீது கடவுளின் தீர்ப்பை முன்னறிவித்தார். மேலும் ஊழல் செய்தவர்கள் மற்றவர்களை சுரண்டும் போது வளர்வதற்கு தேவன் எவ்வாறு அனுமதிக்க முடியும் என்று அவர் போராடினார். ஆனால் தேவன் தம்முடைய நேரத்தில் நம்பிக்கையையும் மீட்டு எடுப்பதையும் வாக்களித்தார். குறித்த காலத்துக்கு தரிசனம் (கடவுளின் உதவி) இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை” (2:3).
பாபிலோனின் சிறையிருப்பு 70 வருடம் நீடித்தது. மனித கணக்கெடுப்பின்படி அது ஒரு நீண்ட காலம், ஆனால் தேவன் அவருடைய வார்த்தைக்கு உண்மையும் நேர்மையும் உள்ளவர்.
கடவுளின் சில மிகச்சிறப்பான ஆசீர்வாதங்கள் வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அது தாமதித்தாலும், அவரையே நோக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் சரியான ஞானத்துடனும் அக்கறையுடனும் தயார் செய்கிறார். நாம் காத்திருப்பதற்கு அவர் எப்போதும் தகுதி வாய்ந்தவர்.
கடவுளிடமிருந்து நீங்கள் என்ன ஆசீர்வாதங்களுக்காக காத்திருக்கிறீர்கள்?ஆசீர்வாதம் எப்போது வந்தாலும் அவரை எப்படி துதிக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
அப்பா, பிதாவே, ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்வின் ஆசீர்வாதத்திலும் உமது கருணை மற்றும் நம்பகத்தன்மை இவற்றிற்காக நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக உம்மையே நான் எதிர்நோக்கி இருப்பதற்கு எனக்கு உதவும்.