23 வாரங்களில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை செய்பி, 245 கிராம் எடை மட்டுமே இருந்தாள். அவள் உயிர் வாழ்வது சந்தேகம் என்று மருத்துவர்கள் அவள் பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தனர். ஆனால் செய்பி தொடர்ந்து போராடினாள். அவள் அருகே ஒரு இளஞ்சிவப்பு நிற அட்டையில் ”சிறிய ஆனால் வல்லமையான” என்று எழுதி வைக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு பிறகு அற்புதமாக செய்பி 2.26 கிலோ எடை கொண்ட ஆரோக்கியமான குழந்தையாக வீடு திரும்பியது மட்டுமல்லாமல் உலகிலேயே உயிர் பிழைத்த மிக சிறிய குழந்தை என்ற உலக சாதனையையும் எடுத்து சென்றாள்.

முரண்பாடுகளை வென்றவர்களின் கதைகளைக் கேட்பது வல்லமை வாய்ந்தது. வேதாகமமும் அது போன்ற ஒரு கதையை கூறுகிறது. தேவனை தூஷித்து இஸ்ரவேலை மிரட்டிய ஒரு ராட்சத போர்வீரனான கோலியத்தை எதிர்த்து சண்டையிட ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீது முன் வந்தான். சவுல் இராஜா “நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்” (1 சாமுவேல் 17:33). தாவீது போர்க்களத்தில் இறங்கியபோது, கோலியாத் “சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.” (வச 42). ஆனால் தாவீது போர்க்களத்திற்கு தனியாக செல்லவில்லை. “இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்றான் (வச 45). அந்த நாள் நிறைவடைந்தபோது செத்துப்போன கோலியாத்தின் மீது வெற்றி பெற்ற தாவீது நின்றான்.

பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவன் நம்மோடு இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பெலத்தினால் நாமும் வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம்.