300 குழந்தைகள் உடைமாற்றிக் கொண்டு, காலை உணவிற்காக அமர்ந்தனர். உணவிற்காக நன்றி ஜெபமும் ஏறெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு உணவு இல்லை! இத்தகைய சூழல், அந்த அனாதை குழந்தைகள் இல்லத்தின் இயக்குனரும் ஊழியருமான ஜார்ஜ் முல்லருக்கு (1805-1898) புதிதல்ல.  தேவன் அவர்களை எப்படி போஷிப்பார் என்பதைக் காண இது மற்றொரு வாய்ப்பு. மில்லரின் ஜெபம் முடிவடைந்த சில நிமிடங்களில், முந்திய இரவு தூங்கமுடியாமல், 3 முறை ரொட்டி செய்த ஒரு ரொட்டிக் கடைக்காரர், இந்த அனாதையில்லத்தில், அவருடைய ரொட்டிகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து வாசலில் வந்து நின்றார். இது நடந்த சற்று நேரத்தில், அந்தப் பட்டணத்திற்குப் பால்           விநியோகிக்கும் ஒருவர் வந்தார். அவருடைய வாகனம் இந்த அனாதை இல்லத்தின் அருகில் பழுதடைந்து நின்று விட்டது. அதிலிருந்த பால் வீணாவதை விரும்பாத அவர் அதனை முல்லருக்குக் கொடுத்தார்.

நம்முடைய நலவாழ்வுக்குத் தேவையான அடிப்படைகளாகிய ஆகாரம், தங்கும் இடம், சுகம், பொருளாதாரம், நட்பு ஆகியவை கிடைக்காதபோது, நாமும் கவலை, பதட்டம், சுய பரிதாபம் ஆகியவற்றிற்குள் தள்ளப்படலாம். தேவையிலிருக்கும் ஒரு விதவையின் மூலம் தேவன் தரும் உதவி வந்ததைப் பற்றி முதல் இராஜாக்கள் 17:8-16 நமக்கு நினைவு படுத்துகின்றது. “பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லை” (வ.12) என்று அவள் கூறுகின்றாள். இதற்கு முன்பு காகங்கள் எலியாவை போஷித்ததைப் பற்றி காண்கின்றோம் (வ.4-6). நம்முடைய தேவைகளைச் சந்திக்கும் படி நாம் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரியலாம். நம்முடைய தேவைகளையெல்லாம் தருவதாக வாக்களித்துள்ள தேவன் நமக்குத் தருவார் என்ற தெளிவான சிந்தனையை நாம் பெற்றுக் கொள்ளும் போது, பிரச்சனையிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொள்வோம். நாம் தீர்வுகளைத் தேடிக் கொள்ளும் முன்பு, முதலாவது தேவனைத் தேட கவனமாய் இருப்போம். அப்படிச் செய்யும் போது, நேரத்தை வீணாக்குவதையும், ஆற்றலைச்செலவிடுவதையும் தோல்வியையும் தவிர்த்துகொள்ளலாம்.