“பப்பா ஜாண்” என்று அழைக்கப் படும் ஒரு மனிதன் தான் புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக அறிந்து கொண்டான். அவனும் அவனுடைய மனைவி கேரலும், நோயோடு தாங்கள் செய்யும் பயணத்தைக்குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள தேவன் விரும்புகின்றார் என்பதை உணர்ந்தனர். அவர்களுடைய பாதிப்பின் வழியாகவும் தேவன் செயல்பட முடியும் என்பதை விசுவாசித்தனர். அவர்களின் மகிழ்ச்சி, துயரம் மற்றும் வேதனை நேரங்களை, இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் பதித்து வந்தனர்.

தன்னுடைய கணவன் “இயேசுவின் விரிந்த கரத்தினுள் சென்று விட்டார்” என்று கேரல் எழுதிய போது, நூற்றுக் கணக்கானோர் பதிலளித்தனர். கேரலின் வெளிப்படையான பகிர்வுக்காக அநேகர் நன்றி கூறினர். கிறிஸ்தவர்களின் மரணம் பற்றி கேட்பது ஒரு வகையில் நன்மையானது, ஏனெனில், “நாம் அனைவரும் ஒரு நாள்  மரிக்கப் போகின்றோம்” என்பதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், நாங்கள் இந்த தம்பதியரை நேரடியாகப் பார்த்ததில்லை எனினும், அவர்கள் தேவன் பேரில் கொண்டுள்ள  நம்பிக்கையைப் பார்த்து,  நாங்களும் எங்களுடைய வாழ்வில் சொல்ல முடியாத அளவு ஊக்கத்தைப் பெற்றுக் கொண்டதாக    தெரிவித்திருந்தார்.

 சில வேளைகளில் பப்பா ஜாண், தாங்கமுடியாத அளவு வேதனையைச் சகித்த போதும், அவனும் கேரலும் தங்களின் கதையை பகிர்ந்து கொள்வதன் மூலம், தேவன் அவர்களை எப்படி தாங்கினார் என்பதை வெளிப்படுத்தினர். அவர்களின் சாட்சி, தேவனுக்கென்று கனி தரும் என்பதை அறிந்திருந்தனர். பவுல் துன்பங்களைச் சகித்த போது, தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராய் இருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ.1:12) என்றார்.

நாம் நேசிக்கும் நபரின் மரணம் மூலமாகவும் தேவன், நாம் அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தை (பிறரின் விசுவாசத்தையும்) கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும் (வ.9) பெலப்படுத்த முடியும். நீயும் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றாயா?  ஆறுதலையும் சமாதானத்தையும் நம் தேவனால் தர முடியும் என்பதை அறிவாயாக.