ஆலயத்தைக்குறித்து விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த, பதினேழு வயது நிரம்பிய தாமஸ், அநேக ஆண்டுகளாக வைத்திருந்த கேள்விகளுக்கு விடையைத் தேடினான். அவனுடைய தேடலின் பயனாக, அவனுடைய ஏக்கங்களுக்கு தீர்வோ அல்லது அவனுடைய கேள்விகளுக்கு பதிலோ கிடைக்கவில்லை.
அவனுடைய பயணம், அவனை அவனுடைய பெற்றோருக்கு அருகில் கொண்டுவந்தது. ஆயினும் அவனுக்குள் கிறிஸ்தவத்தைக் குறித்து அநேக சந்தேகங்கள் இருந்தன. ஒரு சம்பாஷணையின் போது, அவன், “வேதாகமம் முழுவதும் வெறுமையான வாக்குத்தத்தங்களால் நிறைந்திருக்கின்றது” என்று வருத்தத்தோடு கூறினான்.
மற்றொரு மனிதன் ஏமாற்றத்தையும், கஷ்ட நேரத்தையும் சந்தித்தபோது, இவனுடைய சந்தேகங்களை இன்னும் தூண்டியதைப்போல ஆயிற்று. ஆனால், தன்னைக் கொல்ல நினைத்த எதிரிகளிடமிருந்து தப்பி ஓடிய தாவீது, தேவனை விட்டு ஓடிவிட எண்ணவில்லை, மாறாக அவன் தேவனைத் துதித்தான். “என் மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாய் இருப்பேன்” (சங்.27:3) என்று பாடுகின்றார்.
ஆயினும், தாவீதின் பாடல், அவனுக்குள் இருந்த சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றது. அவன், “எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச் செய்யும்” (வ.7) என்று கதறுகின்றான், இது பயத்தால் நிறைந்த மனிதனின் கேள்விகளைப் போன்று உள்ளது. “உமது முகத்தை எனக்கு மறையாதேயும்,…… தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்” (வ.9) என்று கெஞ்சுகின்றான்.
தாவீதின் சந்தேகங்கள் அவனை முடக்கி விடவில்லை. அந்த சந்தேகங்களின் மத்தியிலும், “நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்” (வ.13) என்கின்றான். பின்னர், அவர் வாசகர்களை நோக்கி: உன்னையும், என்னையும், இவ்வுலகில் தாமஸ்ஸைப் போன்றுள்ளோரையும் நோக்கி, “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு” (வ.14) என்கின்றார்.
நம்முடைய பெரிய கேள்விகளுக்கு உடனடியாக, எளிய பதில் வரும் என எதிர் பார்க்க முடியாது. ஆனால், நாம் தேவனுக்கு காத்திருக்கும் போது, பதில் நிச்சயம் வரும். அவர் நம்பிக்கைக்குரிய தேவன்.
உன்னுடைய உள்ளத்திலுள்ள பெரிய கேள்விகளுக்கு எவ்வாறு பதில் காண்பாய்? 'ஜீவனுள்ளோர் தேசத்தில்" (சங்கீதம் 27:13) எங்கு அதற்கான பதிலைக் கண்டாய்? அதற்கான பதிலுக்காக இன்னும் எங்கு காத்துக் கொண்டிருக்கின்றாய்?
பிதாவே, பயமும், கோபமும் நிறைந்த என்னுடைய இருதயத்தை உருக்கியருளும்.