சில காரியங்களை நாம் அநுபவித்தால் மட்டும் தான், நம்மால் புரிந்து கொள்ள முடியும். நான் என்னுடைய முதல் குழந்தையைக் கருவில் சுமந்த போது, மகப்பேறு பற்றி அநேகப் புத்தகங்களை வாசித்தேன், அநேகப் பெண்களிடம் பேறுகால வேதனையைப் பற்றியும், பிள்ளை பெறுதலைப் பற்றியும் கேட்டறிந்தேன். ஆனாலும் அதனைக் குறித்து முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சரீரம் நிறைவேற்றக் கூடிய அந்தக் காரியம், என்னுடைய பார்வைக்கு முடியாததாகத் தோன்றியது!
கிறிஸ்துவின் மூலம் தேவன் அருளிய இரட்சிப்பின் மூலம், தேவனுடைய இராஜியத்தில் பிறப்பதைக் குறித்து, பவுல், 1 கொரிந்தியரில் எழுதுகின்றார். அதனை அநுபவியாதவர்களால், அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது. அவமானத்தாலும், தோல்வியினாலும், பெலவீனத்தாலும், இயேசு சிலுவையில் அடைந்த மரணம் நமக்கு இரட்சிப்பைத் தரும் என்ற செய்தி “முட்டாள்தனமாக” தோன்றலாம். ஆனாலும் இந்த முட்டாள்தனத்தைக் குறித்தே பவுல் பிரசங்கம் செய்தார்!
அது இவ்வாறு இருக்கும் என்பதை யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வலிமையான அரசியல்வாதியின் மூலம் இரட்சிப்பு வரும் என சிலர் எதிர்பார்த்தனர். சிலர் ஏதோவொரு அடையாளத்தின் மூலம் இரட்சிப்பு வரும் என நினைத்தனர். சிலர் தங்களுடைய ஞானத்தினாலும் அறிவினாலும் அடையும் சாதனையை இரட்சிப்பு என நினைத்தனர் (1 கொரி. 1:22). ஆனால் தேவன் தம்மை விசுவாசிக்கின்றவர்களும், அதனை அநுபவிக்கின்றவர்களும் மட்டுமே உணரத்தக்கதாக, ஆச்சரியப்படும் வகையில், இரட்சிப்பைக் கொண்டுவந்தார்.
தேவன் அவமானத்துக்கு உரியதையும், பலவீனமானதையும், சிலுவை மரணத்தையும் தெரிந்துகொண்டார், அதனையே ஞானத்திற்கும், வல்லமைக்கும் அடிப்படையாக்கினார். நாம் நினைத்துப் பார்க்கமுடியாததை தேவன் முடித்தார். அவர் பெலவீனரையும், பைத்தியமானவைகளையும் தெரிந்து கொண்டார் (வ.27).
நாம் எதிர் பார்ப்பதற்கு மாறாக, அவர் தெரிந்துகொண்ட ஆச்சரியமான வழிகளே எப்பொழுதும் சிறந்தவை.
இன்று தேவன் உன்னை எவ்வாறு ஆச்சரியப்படுத்தினார்? உன்னுடைய வழிகளைக் காட்டிலும் தேவனுடைய வழிகள் சிறந்தவை என்பது எப்படி உண்மையானது?
தேவனே, ஏசாயாவோடு சேர்ந்து நானும் ஜெபிக்கின்றேன், என்னுடைய வழிகளைக் காட்டிலும் உம்முடைய வழிகளும், என்னுடைய எண்ணங்களைக் காட்டிலும் உம்முடைய எண்ணங்களும், பூமியிலிருந்து வானம் எவ்வளவு உயரமோ அவ்வளவு உயர்ந்தவைகள்.