அநேக வருடங்களுக்கு முன்பு, என்னுடைய மனைவியும் நானும் அருகிலுள்ள ஒரு சிறிய ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு ஆராதனை வேளையில், ஒரு பெண் நடுப்பகுதியில் நடனம் ஆட ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில், அவளோடு மற்றும் அநேகர் இணைந்து கொண்டனர். கேரலினும் நானும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம். “நான் இல்லை!” என எங்களுக்குள்ளே பார்வையாலே தெரிவித்துக் கொண்டோம். நாங்கள் ஓர் அமைதலான ஆராதனை முறையை வழக்கமாகக் கொண்டுள்ள ஆலயத்திற்குச் செல்வதால், இந்த மாற்று ஆராதனை முறை எங்களுக்குப் பொருந்திவரவில்லை.
மாற்கு கூறும், மரியாளின் கதையில் வரும் “வீண் செலவு” என்பது அவள் இயேசுவின் மேல் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று, அது மற்றவர்களுக்குப் பொருந்திவரவில்லை (மாற்.14:1-9). மரியாள் செய்த தைலாபிஷேகத்தின் மதிப்பு, ஒருவருடைய ஒரு வருட கூலிக்குச் சமம். இது ஒரு “ஞானமற்றச்” செயல் என்று சீஷர்கள் முறுமுறுப்பதற்குக் காரணமாயிருந்தது. முறுமுறுப்பவர்களின் அதிருப்தியையும் இவர் இதற்குத் தகுதியற்றவர் என்பதாக இழிவு படுத்தினதையும் மாற்கு குறிப்பிடுகின்றார். இயேசு என்ன சொல்லுவாரோ என்று எண்ணி மரியாளும் பின்வாங்கியிருக்கலாம். ஆனால் இயேசுவோ அவளுடைய தன்னலமற்றச் செயலைப் பாராட்டினார், அவளைத் தன்னுடைய சொந்த சீஷர்களிடமிருந்து பாதுகாக்கின்றார், ஏனெனில், அவர் இச்செயலைத் தூண்டிய அவளுடைய அன்பைப் பார்க்கின்றார், மற்றவர்கள் அவளுடைய செயலை, செய்யக் கூடாததாக கருதிய போதிலும், அவர் “ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (வ.6) என்றார்.
வெவ்வேறு வகையான ஆராதனைகள் – பாரம்பரிய முறை, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்டது, அமைதியான முறை அல்லது ஆரவாரத்தோடு ஆராதிப்பது எல்லாமே இயேசுவின் மீதுள்ள அன்பை உண்மையாக வெளிப்படுத்துவதாகும். உள்ளதின் ஆழத்திலிருந்து வரும் அன்போடு, ஆராதிக்க அவர் தகுதியானவர்.
சர்வ வல்ல தேவனே, நான் உமக்கு முன்பாக பணிந்து, உம்மை ஆராதிக்கின்றேன். நீர் ஒருவரே எல்லாவற்றிற்கும் மேலாக போற்றவும் ஆராதிக்கவும் தகுந்தவர்.