இரவு வேளையில், தனக்கு முன்பாக இருக்கின்ற வேலையைக் குறித்து ஆராயும் படி, அந்தத் தலைவன் தன்னுடைய குதிரையில் புறப்பட்டான். இடிபாடுகளைச் சுற்றி வந்த அவன், பட்டணத்தின் சுற்றுச் சுவர் அழிக்கப்பட்டிருப்பதையும் அதன் வாயிற்கதவுகள் எரிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். சில பகுதிகளில் உள்ள இடிபாடுகளின் குவியல்களுக்கிடையே அவனுடைய குதிரை செல்வதற்கு வழியில்லாதிருந்தது. துக்கத்தோடு அந்த பிரயாணி, வீட்டிற்குத் திரும்புகின்றான்.
அந்தப் பட்டணத்தின் பாதிப்பைக் குறித்து, அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்த போது அவன், “நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே” (நெகே.2:17) என்று ஆரம்பிக்கின்றான். பின்னர் அந்த பட்டணம் அழிக்கப்பட்டு கிடக்கிறதையும், அதனைப் பாதுகாக்க வேண்டிய அலங்கம் உடைக்கப் பட்டு பயனற்றுக் கிடக்கின்றதையும் பற்றி கூறினான்.
துயரத்தில் இருக்கும் அந்த பட்டணத்தின் மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்வகையில், “ தேவனுடைய கரம் அவன் மேல் நன்மையாக இருக்கிறதையும்” அவர்களுக்கு அறிவித்தான். உடனே அந்த ஜனங்கள், “எழுந்து கட்டுவோம் வாருங்கள்” (வ.18) என்றனர்.
அப்படியே செய்தார்கள்.
தேவன் மீதுள்ள நம்பிக்கையோடும், தங்களின் முழு முயற்சியோடும், எதிரிகளின் எதிர்ப்பின் மத்தியிலும், தங்களால் கூடாது என்று எண்ணக் கூடிய மிகப் பெரிய வேலையை எருசலேம் மக்கள், நெகேமியாவின் தலைமையில், அலங்கத்தை திரும்ப 52 நாட்களில் கட்டிமுடித்தனர் (6:15).
உன்னுடைய சூழ் நிலைகளைப் பார்க்கும் போது, தேவன் உன்னிடம் எதிர்பார்க்கும் வேலை, உனக்கு மிகவும் கடினமானதாக தோன்றுகின்றதா? ஒரு பாவச் செயலை விட்டு விட கடினமாக இருக்கின்றதா? ஓர் உறவு தேவன் விரும்பாதவகையில் போய் கொண்டிருக்கின்றதா? தேவனுக்காக செய்ய வேண்டிய ஒன்று கடினமானதாக காணப்படுகின்றதா?
தேவன் உன்னை வழி நடத்தும் படி கேள் (2:4-5), பிரச்சனைகளை ஆராய்ந்து பார் (வ.11-15), தேவனுடைய வழி நடத்துதலை அறிந்து கொள்(வ.18), பின்னர் கட்டுகின்ற வேலையைத் தொடங்கு.
தேவனே, எனக்கு உம்முடைய உதவி தேவை, இந்த பிரச்சனைகளை என்னால் தனித்து தீர்க்க முடியாது. என்னுடைய சூழ் நிலைகளைப் புரிந்து கொண்டு, உம்முடைய வழி நடத்துதலையும், உதவியையும் தேடி, எனக்கு முன்பாக இருக்கின்ற சவால்களை தீர்க்க உதவியருளும்.