லண்டன் பட்டணத்தில், மிகப்பெரிய விபச்சார விடுதி நடத்தி வந்த ஜாண், சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டபோது, தன்னை நல்லவன் என்று தவறாக நம்பினான். அங்கு சிறைச்சாலையில் நடைபெற்று வந்த வேதாகம வகுப்பில் தரப்படும் கேக் மற்றும் காப்பிக்காக அங்கு சென்றான். ஆனால், அங்கு வருபவர்களிடம் காணப்படும் மகிழ்ச்சி, அவனைச் சிந்திக்க வைத்தது. முதல் பாடல் வேளையில் அவன் அழ ஆரம்பித்தான், பின்னர் ஒரு வேதாகமத்தைப் பெற்று வாசிக்க ஆரம்பித்தான். எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் அவனை மாற்றியது. எதிர்பாராத விதமாக அவன் “துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தை விட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில்…………….. அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை” (எசே.18:27-28) என்ற வார்த்தையைப் படித்தான். தேவனுடைய வார்த்தைகள் அவனுக்குள் ஜீவன் பெற்றது, அவன் உணர்வடைந்தான், “நான் நல்லவனல்ல,………..நான் தீமை செய்தேன், நான் மாற வேண்டும்” என்றான், அவன் போதகரோடு சேர்ந்து ஜெபித்த போது, “நான் இயேசுவைக் கண்டேன், அவர் என்னை மாற்றினார்” என்றான்.
தேவனுடைய ஜனங்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருந்த போது, எசேக்கியேல் தீர்க்கதரிசி, இந்த வார்த்தைகளைப் பேசினார். அவர்கள் தேவனை விட்டு, பின்வாங்கிப் போயிருந்தாலும், அவர்கள் தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனந்திரும்பி, “புது இருதயத்தையும், புது ஆவியையும்” (வ.31) உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். “மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.32) என்ற வார்த்தைகள் ஜாணுக்கு உதவியது. பாவிகளை மனந்திரும்புங்கள் (லூக்.5:32) என்று அழைத்த இயேசுவைப் பின்பற்றினான்.
நம்முடைய ஆவியில் உணர்த்தப் படுகின்ற பாவங்களைக் குறித்து மனம் வருந்துவோம். நாமும் மன்னிப்பைப் பெற்று விடுதலையோடு வாழ்வோம்.
அப்பா பிதாவே, உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னுடைய பாவ வாழ்வை சுட்டிக் காட்டுவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என்னுடைய இருதயத்தை உடைத்து, மனந்திரும்பி மன்னிப்பை பெற்றுக் கொள்ள உதவியருளும்.