ஆல்டி என்ற வாலிபன் இந்தோனேஷியாவிலிருந்து 125 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 78 மைல்கள்) தொலைவிற்கு அப்பால், சுலவேசி என்ற தீவில் தன்னந்தனியாக, ஒரு மிதக்கும் மீன் பிடி குடிசையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, குடிசையைத் தாக்கிய வலிமையான காற்று, நங்கூரத்தோடு அக்குடிசையை கடலில் தூக்கி எறிந்தது. 49 நாட்கள் ஆல்டி சமுத்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டான். ஒவ்வொரு முறை அவன் ஒரு கப்பலைப் பார்க்கும் போதும், தன்னுடைய விளக்கை ஏற்றி, மாலுமியின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தான், ஆனால் ஏமாற்றத்தைத் தான் சந்தித்தான். நலிந்து காணப்பட்ட அந்த வாலிபன் மீட்கப் படும் முன்னர் ஏறத்தாள 10 கப்பல்கள் அவனைக் கடந்து சென்றன.
ஒரு நியாயசாஸ்திரியிடம் இயேசு, காப்பாற்றப் படவேண்டிய ஒரு மனிதனைக் குறித்த, ஓர் உவமையைச் சொன்னார் (லூக். 10:25). இரண்டு மனிதர்கள் – ஓர் ஆசாரியனும், ஒரு லேவியனும் தங்களின் பிரயாணத்தின் போது காயப்பட்டு கிடந்த ஒரு மனிதனைக் காண்கின்றனர். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் “பக்கமாய் விலகிப் போயினர்” (வ. 31-32). ஏன் அவ்வாறு சென்றனர் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. இருவருமே மதப்பற்றுடையவர்கள், எனவே நிச்சயமாக, பிறனை நேசி என்ற தேவனுடைய கட்டளையை அறிந்திருக்க வேண்டும் (லேவி.19:17-18). ஆனால், அவர்கள் அதனை மிகவும் ஆபத்தானது என்று கருதியிருக்கலாம், அல்லது மரித்துப்போன உடலைத் தொடுவதன் மூலம், தீட்டுப்பட்டவர்கள் ஆலயத்தில் பணிசெய்யக் கூடாது என்ற யூத சட்டத்தை மீற நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக யூதர்கள், இழிவாகக் கருதும் சமாரியன் ஒருவன் உயர்ந்த காரியத்தைச் செய்கின்றான். அவன் தேவையிலிருக்கும் அந்த மனிதனைப் பார்க்கின்றான், தன்னலமின்றி அவனைப் பாதுகாக்கின்றான்.
இயேசு, தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடம் “நீயும் போய் அந்தப்படியே செய்” (லூக்.10:37) என்கின்ற கட்டளையோடு தன்னுடைய போதனையை முடிக்கின்றார். பிறருக்கு உதவி செய்வதில் கஷ்டங்கள் இருந்தாலும், அன்போடும் முழுமனத்தோடும் உதவி செய்ய தேவன் நமக்கு உதவி செய்வாராக.
நீ உதவி செய்யும்படி உன்னுடைய பாதையில் யாரை தேவன் வைத்துள்ளார்? இன்று உன்னுடைய அன்பை எப்படி வெளிப்படுத்தப் போகின்றாய்?
தேவனே, என்னைச் சுற்றிலும் இருப்போரின் தேவையைக் காணும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும், உம்முடைய இரக்கமுள்ள இருதயத்தை எங்களுக்குத் தந்தருளும்.