தேவன் குறித்த நேரத்தில், ஒரு வெள்ளிக் கிழமை, எங்களுடைய மகன் கோஃபி பிறந்தான், அதுவே அவனுடைய பெயரின் அர்த்தம்- வெள்ளிக் கிழமை பிறந்த பையன் என்பது அதன் அர்த்தம். கானாவைச் சேர்ந்த, எங்களுடைய நண்பனும் போதகருமானவருடைய ஒரே மகன் மரித்துப் போனான், நாங்கள் அவனுடைய பெயரையே எங்களுடைய மகனுக்கு வைத்துள்ளோம். அவர் எங்களுடைய மகனுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறார். எங்களை மிகவும் மதிக்கின்றவர்.
ஒரு பெயரின் பின்னாலுள்ள கதையைத் தெரிந்து கொண்டாலன்றி, அதன்முக்கித்துவத்தை நம்மால் உணரமுடியாது. லூக்கா 3 ஆம் அதிகாரத்தில், யோசேப்பின் முன்னோர்களைப் பற்றிய விளக்கத்தைக் காண்கின்றோம். யோசேப்பிலிருந்து பின்னோக்கி ஆதாம் வரை, ஏன் தேவன் வரையும் வம்ச வரலாற்றைக் காண்கின்றோம் (வ.38). வசனம் 31ல், “நாத்தான் தாவீதின் குமாரன்” என்பதாக வாசிக்கின்றோம். நாத்தான்? அது நமது ஆர்வத்தைத் தூண்டுகிறது. 1 நாளாகமம் 3:5 ல், நாத்தான் பத்சேபாளின் குமாரன் எனக் காண்கின்றோம்.
பத்சேபாளின் குமாரனுக்கு நாத்தான் என்று பெயரிட்டது தற்செயலாக நடைபெற்றதா? இதன் முன்கதையைப் பார்ப்போம். பத்சேபாளை தாவீதின் மனைவி என்றே கூற முடியாது. தாவீது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, பத்சேபாளின் கணவனை கொலை செய்து, அவளை வஞ்சித்தான் என்பதை, நாத்தான் தீர்க்க தரிசி தைரியமாக ராஜாவிடம் எடுத்துக் கூறுகின்றான் (2 சாமு. 12).
தீர்க்கதரிசி, தாவீதை நேரடியாக கண்டித்து, அவனுடைய பயங்கரமான தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்றான். அவனுடைய காயங்கள் ஆற்றப்பட்ட பின்பு, அவன் தனது மகனுக்கு நாத்தான் என்று பேரிட்டிருப்பான். பத்சேபாளின் இந்த மகன் தான், இயேசுவினுடைய உலகத் தந்தையான யோசேப்பினுடைய முன்னோர்களின் பட்டியலில் வருகின்றவர் (லூக். 3:23).
ஒவ்வொரு காரியத்திலும் தேவனுடைய கிருபை பிணைக்கப் பட்டிருப்பதை வேதாகமத்தில் காண்கின்றோம். நாம் அதிக கவனம் செலுத்தாத பகுதியான, ஜென்ம வரலாற்றுப் பகுதியிலுள்ள பெயரிலும் கூட, அவருடைய கிருபையைக் காண்கின்றோம். தேவனுடைய கிருபை எங்கும் உள்ளது.
உன்னுடைய வாழ்க்கையில், எதிர்பாராத எவ்விடங்களில் தேவனுடைய கிருபையைப் பெற்றுள்ளாய்? தேவனுடைய கதையைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது, அந்த கதையில் உன்னுடைய பங்கில் தேவக் கிருபையை கண்டுபிடிக்க முடிகின்றதா?
அன்புள்ள தேவனே, நாங்கள் காண்கின்ற எவ்விடத்திலும் உம்முடைய கிருபையைபெற்றுக் கொள்ள எங்களுக்கு உதவியருளும்.