ஓர் அழகான, பெரிய பியானோவின் ஓசையைச் சரிசெய்பவர் வேலை செய்து கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதே பியானோவிலிருந்து வியத்தகு இசையைக் கேட்ட நாட்களை நான் நினைத்துப் பார்த்தேன். “How Great Thou Art” என்ற பாடலின் சிறப்பான இசையைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் இப்பொழுது அந்த இசைக் கருவியின் ஓசையை சரிசெய்ய வேண்டியுள்ளது. சில ஸ்வரங்களின் சுருதி சரியாக உள்ளது, சிலவற்றின் சுருதி சற்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ உள்ளது, எனவே அதன் இசை கேட்பதற்கு இனிமையாக இல்லை. இப்பொழுது அந்தக் கருவியை சரியாக்குபவரின் வேலை, ஒவ்வொரு கீயும் ஒரே ஓசையை எழுப்பச் செய்வதில்லை, மாறாக ஒவ்வொரு கீயிலிருந்தும் வரும் ஓசை மற்றதோடு இணைந்து, ஓர் இனிமையான ஒருங்கிணைந்த இசையை எழுப்புவதேயாகும்.

ஆலயங்களிலும் கூட, இணையாத ஓசைகளை கேட்க முடியும். வித்தியாசமான நோக்கமும், திறமையும் உள்ள மக்கள், அனைவரும் சேர்ந்து பாடும் போது, ஒருங்கிணையாத ஓசைகளை எழுப்பலாம். கலாத்தியர்
5 ஆம் அதிகாரத்தில், பவுல் விசுவாசிகளிடம், “இணங்காமை, பொறாமை, கோபம், தன்னலமான நோக்கம்” ஆகியவற்றை விட்டு ஒதுங்குமாறு கேட்கின்றார். இவை தேவனோடுள்ள உறவை அழிப்பதோடு, மற்றவர்களோடுள்ள உறவையும் கெடுக்கின்றது. ஆவியின் கனிகளாகிய, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய இவைகளை நாம் அணைத்துக் கொள்ளும் படி பவுல் நம்மை ஊக்கப்படுத்துகின்றார்.

நம்முடைய வாழ்வு ஆவியினாலே நடத்தப்படும் போது, முக்கியமில்லாத காரியங்களுக்காக, தேவையில்லாமல் நாம் குழம்பிப் போவதைத் தவிர்ப்பது நமக்கு சுலபமாக இருக்கும். எதிர் காலத்தைக் குறித்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொள்வோம். நம்முடைய இருதயம் தேவனுடைய இருதயத்தோடு இசைந்து இருக்கும் போது, நாம் ஒரு மனதோடு அவருடைய கிருபையில் வளரவும் தேவன் நமக்கு உதவி செய்வார்.