Archives: ஏப்ரல் 2020

திரையிட்டு மறைக்கப்பட்டது

என்னுடைய ஆகாய விமானம் நிற்பதற்கு சற்று முன்பு, விமானப் பணியாளர் முதல் வகுப்பைப் பிரிக்கும் திரையை நீக்கினார், நான் விமானங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஆச்சரியத்துடன் பார்த்தேன். முதல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள், அதிக காப்பீட்டுத் தொகையோடு கூடிய வசதியான இருக்கைகளையும், சற்று அகலமான கால்களை வைத்துக் கொள்ளும் இடைவெளியையும், தனிப்பட்ட சேவை வசதியையும் அநுபவிக்கின்றனர். அந்த அதிகப்படியான வசதிகளிலிருந்து நான் பிரிக்கப் பட்டிருக்கின்றேன் என்பதை அந்த திரை காண்பித்தது. வெவ்வேறு கூட்ட மக்களிடையே பிரத்தியேக பாகுபாடு காண்பித்தலை சரித்திரத்தில் அநேக இடங்களில் காண்கின்றோம். எருசலேமின் தேவாலயத்திலும் அத்தகைய ஒரு பாகுபாட்டைக் காணமுடிகின்றது, அது ஒருவரின் கொடுக்கும் திறனைச் சார்ந்ததல்ல. யூதர்கள் அல்லாத ஜனங்கள், ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தான் ஆராதிக்க அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு அடுத்து வருவது பெண்களுக்கான பிரகாரம், அதில் மிக அருகில் இருப்பது ஆண்களுக்கான பகுதி. கடைசியாக மகா பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படும் இடம், தேவன் தம்மை எப்பொழுதாகிலும் வெளிப்படுத்தும் இப்பகுதி ஒரு திரையினால் மறைக்கப்பட்டிருக்கும், இப்பகுதியினுள் அபிஷேகிக்கப் பட்ட ஆசாரியர்கள் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை செல்வர் (எபி. 9:1-10).

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த பிரிவினைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேவனைச் சேரும்படி தேடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த தடையையும் இயேசு முற்றிலுமாக அகற்றினார் – நம்முடைய பாவங்களையும் நீக்கினார் (10:17). கிறிஸ்து மரித்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது போல (மத். 27:50-51), சிலுவையில் அறையப்பட்ட அவருடைய சரீரத்தின் மூலம், தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள தடையை கிழித்தெரிந்தார். எந்த ஒரு தடையும் உயிரோடிருக்கும் நம்முடைய தேவனின் அன்பையும், மகிமையையும், விசுவாசிகள் அநுபவிக்கக் கூடாதபடிக்கு பிரிக்கவில்லை.

உறுதியாயிருத்தல்

ஏட்ரியனும், அவனுடைய குடும்பமும் வாழ் ந்த நாட்டில், இயேசு கிறிஸ்துவின் மீது அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் நிமித்தம் அவர்கள் துன்பங்களைச் சகித்தனர். ஆனால் இவற்றின் மத்தியிலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பைக் காட்டினர். தீவிரவாதிகள் தங்களின் பயிற்சி மையமாக பயன்படுத்தி, நொருக்கிய அந்த ஆலய வளாகத்தில் நின்றவாறு அவர், “இன்று பெரிய வெள்ளிக் கிழமை, இயேசு நமக்காகச் சிலுவையில் பாடுகளைச் சகித்தார் என்பதை நினைவு கூருகின்றோம்” என்றார், பாடுகள் என்பது விசுவாசிகள் புரிந்து கொண்ட ஒன்று. அவருடைய குடும்பம் அவ்விடத்திலேயே இருக்கும்படி தெரிந்து கொண்டது, “நாங்கள் இவ்விடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறோம்” என்றார். இயேசு சிலுவையில் மரித்தபோது அருகிலிருந்த பெண்களை, இந்த விசுவாசிகளும் பின்பற்றுகின்றனர் (மாற்.15:40). அங்கு மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் தைரியமாக அங்கிருந்தனர். ஒரு தேச துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்ட இயேசுவின் நண்பர்களையும், குடும்ப நபர்களையும் கூட அவர்கள் தரக்குறைவாக பேசவும், தண்டிக்கவும் கூடும். ஆயினும் அந்த பெண்கள் இயேசுவின் மீதுள்ள அன்பை அவரோடு கூட இருப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். “அவர் கலிலேயாவிலிருந்த போது, அவருக்குப் பின் சென்று ஊழியம் செய்துவந்த” (வ.40) அந்த பெண்கள் அவருடைய கடைசி நேர ஆழ்ந்த வேதனையின் போது, அவரோடேயிருந்தனர்.

இந்த நாளிலும் நமது இரட்சகர் நமக்காகச் செய்துள்ள மிகப் பெரிய ஈவை நாம் நினைத்துப் பார்ப்போம், அவர் சிலுவை மரணம் வரை சென்று, நமக்காக செய்த தியாகத்திற்காக, நாமும் பலவகையான சோதனைகளைச் சந்திக்கும் போது, இயேசுவுக்காக எப்படி உறுதியாய் நிற்கலாம் என்பதை மனதில் இறுத்திக் கொள்வோம் (யாக்.1:2-4). உலகெங்கும் விசுவாசிகள் கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்திற்காக பாடுகளைச் சகித்ததை நினைத்துக் கொள்வோம். ஏட்ரியன் கேட்டுக் கொண்டது போல, “நீங்களும் எங்களோடு கூட ஜெபத்தில் இணைந்து கொள்ள முடியுமா?”

நீ செல்லும் பாதையில் நிலைத்திரு

மத்திய சீனாவில், நான் லீ போ வைப் பின்தொடர்ந்து, மலைகளுக்கிடையே போடப்பட்டிருந்த தளத்தின் வழியே நடந்து செல்கையில் பொழுது சாய்ந்து விட்டது. இதற்கு முன்பாக நான் இந்தப் பாதை வழியே சென்றதில்லை, எனக்கு முன்பாக ஒரு அடி தொலைவு தான் என்னால் பார்க்க முடிந்தது, என்னுடைய இடது புறத்தில் எவ்வளவு ஆழத்திற்கு பள்ளம் உள்ளது என்பதையும் என்னால் காணமுடியவில்லை. நான் மூச்சு வாங்கியவனாய், லீயோடு ஒட்டிக்கொண்டேன். நாங்கள் எங்கு செல்கின்றோம், அல்லது எவ்வளவு நேரம் ஆகும் என்பதையெல்லாம் அறியாதவனாய், என்னுடைய நண்பனையே நம்பிச் சென்றேன்.

எதிலும் சந்தேகப்படும் சீஷனான தோமாவின் நிலைமையில் நான் இருந்தேன். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், தான் அவர்களுக்கு ஓர் இடத்தை ஆயத்தப்படுத்தப் போவதாகத் தெரிவித்தார். “நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்” (யோவா. 14:4) என்பதாகத் தெரிவித்தார். உடனே தோமா விவாதத்துக்குரிய ஒரு கேள்வியை எழுப்பினான். “ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை எப்படி நாங்கள் அறிவோம்?” என்றான்.

இயேசு உடனடியாக அவர்களை எங்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை அவனுக்கு விளக்கி, அவனுடைய சந்தேகத்தைத் தீர்க்க முற்படவில்லை. ஆனால் அவர் தன் சீஷர்களிடம், அவரே அவர்களுக்கு வழியாக இருப்பதாக உறுதியளித்தார். அதுவே அவர்களுக்குப் போதுமானது.

நமக்குள்ளும் எதிர்காலத்தைக் குறித்து கேள்விகள் எழலாம். நமது பிற்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஒருவரும் அறியோம். வாழ்க்கை முழுவதும் நெழிவுகளாகத்தான் உள்ளது, நமக்கு எதிரே வருவதை நம்மால் காணமுடியவில்லை. அது சரிதான், ஆனால் நாம் இயேசுவை அறிந்துகொண்டோமேயானால், அவரே நமக்கு “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்”(வ.6) என்கின்றார்.

அடுத்து என்ன வரும் என்பதை இயேசு அறிவார், அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருக்கு மிக நெருக்கமாக நடக்க வேண்டும் என்பதே.

எல்லாவற்றையும் விட விலையேறப்பெற்றவர் தேவன்

கடந்த காலத்தில், இயேசுவின் விசுவாசிகளால் காயப்படுத்தப்பட்ட என்னுடைய தாயார், நான் என்னுடைய வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தபோது, கோபமுற்றார், “ஆகவே நீ இப்பொழுது என்னை நியாயம் தீர்ப்பாயோ? அது உன்னால் முடியாது” என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டார், ஓர் ஆண்டு முழுவதும் அவர் என்னிடம் பேசவே இல்லை. நான் மிகவும் வருந்தினேன், ஆனால் நான் தேவனோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டேன், அது எல்லா உறவுகளைக் காட்டிலும் விலையேறப் பெற்றதாக இருந்தது. அவர் என்னுடைய அழைப்பை மறுக்கும் ஒவ்வொரு வேளையும் நான் தேவனிடம் ஜெபிப்பேன், நான் அவர்கள் மீது அன்பாயிருக்க எனக்கு உதவியருளும் என்று கேட்டேன்.

இறுதியில் நாங்கள் சமாதானமானோம். சில மாதங்களுக்குப் பின்னர் அவர், “நீ மாறிவிட்டாய், நான் உன்னிடமிருந்து இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார். சீக்கிரத்தில் அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டார், எஞ்சிய நாட்களில் தேவனையும் பிறரையும் நேசித்து வாழ்ந்தார்.

இயேசுவிடம் ஓடிச் சென்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஒரு மனிதன், துக்கத்தோடே திரும்பிச் சென்றான், ஏனெனில் அவன் தன்னுடைய ஆஸ்தியை விட்டு விட மனதில்லாதிருந்தான் (மாற். 10:17-22), அதேப் போன்று நானும் அவரைப் பின்பற்றும்படி எல்லாவற்றையும் விட்டு விட முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.

தேவனை விட, நாம் அதிகமாக நேசிக்கும் மக்களையும் பொருட்களையும் நம்மால் எளிதில் விட்டு விட முடியாது (வ.23-25). ஆனால் நாம் இவ்வுலகில் விட்டு விடுபவைகளின் அல்லது இழப்பவைகளின் மதிப்பு இயேசுவோடு நாம் அநுபவிக்கப்போகும் நித்திய வாழ்வை விட நிச்சயமாக அதிகமில்லை. நம் மீது அன்புள்ள தேவன், எல்லா ஜனங்களையும் மீட்பதற்காக தன்னையே பலியாகத் தந்தார், அவர் நம்மை தம்முடைய சமாதானத்தினால் மூடிக்கொள்கின்றார், தம்முடைய விலையேறப் பெற்ற, மாறாத அன்பினால் நம்மைத் தாங்குகின்றார்.

முழுமையாக வெளிப்படுத்தல்

“மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப் படத்தில் வரும் பிரசித்தி பெற்ற அமெரிக்க நடிகையான எமிலி பிளன்ட்டினுடைய அழகிய குரலை திரைப் பட ரசிகர்கள் கேட்டிருப்பர். இவளுடைய திருமண வாழ்வின் நான்காவது ஆண்டில், வியத்தகு வகையில் அவளுடைய கணவன் அவளின் குரல் வளத்தைக் கண்டுபிடித்தார். ஒரு நேர்முக பேட்டியின் போது, அவன் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான், அவன் முதன் முறையாக அவள் பாடுவதைக் கேட்ட போது, “இதனைக் குறித்து எப்பொழுது என்னிடம் சொல்லலாம் என்றிருந்தாய்?” என்று நினைத்ததாகக் கூறினான்.

நம்முடைய உறவுகளிலும், அநேக நேரங்களில் நம்மை வியக்கச் செய்யும், புதியதும், எதிர் பாராததுமான விளக்கங்களைக் கற்றுக் கொள்வோம். மாற்கு சுவிசேஷத்தில், ஆரம்பத்தில் கிறிஸ்துவின் சீஷர்கள் இயேசுவைக் குறித்து ஒரு தெளிவற்ற காட்சியையே கொண்டிருந்தனர், அவர் யார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் கலிலேயா கடலில் இயேசுவைச் சந்தித்தபோது, அவர் தன்னை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார், இம்முறை இயற்கையின் சக்திகளுக்கு மேலாக அவருக்கிருந்த வல்லமையைக் காண்பித்தார்.

ஐயாயிரத்திற்கும் மேலான ஜனங்களைப் போஷித்த பின்பு, இயேசு தன் சீஷர்களை கலிலேயா கடலின் வழியாக அனுப்புகின்றார், அங்கு அவர்கள் வலிமையான புயலில் சிக்கிக் கொள்கின்றனர். விடிவதற்கு சற்று முன்பு, தண்ணீரின் மேல் ஒருவர் நடந்து வருவதை சீஷர்கள் கண்டு பயந்தனர். அவர்களுக்குப் பழக்கமான குரலில், கிறிஸ்துவின் ஆறுதலளிக்கும் வார்த்தைகளைக் கேட்டனர், “திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” (மாற்.6:50) என்ற வார்த்தைகளைக் கேட்டனர். பின்பு அவர் சீற்றத்தோடிருந்த கடலை அமர்த்தினார். இந்த வல்லமையைக் கண்ட சீஷர்கள் “மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்” (6:51), ஆயினும் கிறிஸ்துவின் வல்லமையை முழுமையாக கிரகித்துக் கொள்ள போராடினர்.

நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்திலும், இயேசுவின் வல்லமையை நாம் அநுபவிக்கும் போது தான் அவர் யார் என்பதைப் பற்றிய முழு காட்சியை பெற்றுக் கொள்கின்றோம், அது நம்மை வியக்கச் செய்கின்றது.