தன்னுடைய நண்பனின் மோட்டார் வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞர்களை டேவிட் துரத்திச் சென்றான், அவன் எந்த திட்டத்தோடும் செயல்படவில்லை, அவன் அதனை எப்படியாகிலும் திருப்பிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தான். ஆச்சரியப்படும் படியாக இவன் வருவதைக் கண்ட அந்த மூவரும் பைக்கைப் போட்டு விட்டு, ஓடிவிட்டனர். டேவிட் நிம்மதியடைந்தவனாய், தன்னுடைய முயற்சியைக் குறித்து திருப்தியடைந்தவனாய், அந்த பைக்கை எடுத்துக் கொண்டு திரும்பினான், அப்பொழுது தான், அவனுடைய பெலசாலியான நண்பன் சந்தோஷ், அவர்களுக்குப் பின்னாக, மிக அருகில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

தங்களுடைய பட்டணம் பகைவரின் படைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட எலிசாவின் வேலைக்காரன், பயந்தான், அவன் எலிசாவிடம் ஓடி, “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்றான். எலிசா அவனை அமைதிப் படுத்தினான், “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்றான். பின்னர், தேவன் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார், “எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”
(வச. 15-17).

நீ இயேசுவைப் பின்பற்றிச் செல்ல போராடிக் கொண்டிருக்கும் போது, சில வேளைகளில் பாதுகாப்பற்ற சூழலையும் கடக்க வேண்டியுள்ளது, அப்பொழுது நீ உன் பாரம்பரியத்தையும், உன்னுடைய பாதுகாப்பையும் இழக்க நேரலாம், ஏனெனில் நீ சரியானதைச் செய்ய தீர்மானித்துள்ளாய். இது எப்படி முடியப் போகின்றதோ என்று எண்ணி தூக்கத்தையும் இழக்கலாம். ஆனால், நீ தனியாக இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள். உனக்கு முன்னால் இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும் நீ வலிமையானவனும், திறமையானவனுமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இயேசு உன்னோடு இருக்கின்றார். உன்னுடைய பகைவர் எல்லாரைப் பார்க்கிலும், அவருடைய வல்லமை பெரிது. பவுல் கேட்டதைப் போன்று, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்?” (ரோம.8:31), நாமும் கேட்டுக் கொள்வோம். உண்மையிலேயே யார் நமக்கு எதிராய் நிற்கக் கூடும்? ஒருவரும் இல்லை. தேவனோடு கூட, உன்னுடைய பிரச்சனையை நோக்கி ஓடு.