இயேசுவைப் புதிதாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வேதாகமத்தை வாசிப்பதற்கு மிக ஆவலாக இருந்தார். ஆனால் அவர் தன் கண்பார்வையையும், இரண்டு கரங்களையும் ஒரு வெடி விபத்தில் இழந்தார். ஒரு பெண் தன்னுடைய உதடுகளின் உதவியால் பிரெயில் எழுத்துக்களை வாசிக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்ட போது, அவரும் அதனைச் செய்ய முயற்சித்தார், ஆனால் உதடுகளின் முனையிலுள்ள உணர்வு நரம்புகளும் செயல் இழந்து விட்டன என்பதை அப்பொழுது கண்டுபிடித்தார். கடைசியாக பிரெயில் எழுத்துக்களை நாவின் நுனியினால் உணரமுடிகிறது என்பதைக் கண்ட போது, மிகவும் மகிழ்ந்தார்! வேதாகமத்தை வாசிக்க ஒரு வழியைக் கண்டு கொண்டார்.
தேவனுடைய வார்த்தையைப் பெற்ற போது, எரேமியா தீர்க்கதரிசி சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார், யூதா ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைத் தள்ளிவிட்டதைப் போலல்லாமல் (எரே.8:9) எரேமியா, “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரே.15:16) என்கின்றார். எரேமியா கீழ்படிந்தார், அவருடைய வார்த்தைகளில் மகிழ்ச்சியடை ந்தார். ஆனாலும் அவருடைய கீழ்ப்படிதலின் நிமித்தம், தன்னுடைய சொந்த ஜனங்களாலேயே துன்புறுத்தப்பட்டார் (15:17).
நம்மில் சிலரும் இத்தகைய அநுபவங்களைச் சந்தித்திருக்கலாம். நாம் வேதாகமத்தை மகிழ்ச்சியோடு வாசிக்கின்றோம், ஆனால் தேவனுக்குக் கீழ்படியும் போது, துன்பங்களுக்கும், தள்ளிவிடுதலுக்கும் ஆளாகின்றோம். எரேமியாவைப் போன்று, நம்முடைய குழப்பங்களை தேவனிடம் கொண்டு வருவோம், தேவன் எரேமியாவிற்கு கொடுத்த வார்த்தையை மீண்டும் கூறி பதிலளிக்கின்றார். தேவன் அவரை தீர்க்கதரிசியாக அழைத்த போது கொடுத்த வார்த்தைகளை மீண்டும் கூறுகின்றார் (வச. 19:21; 1:18-19). தேவன் தன்னுடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நினைவுபடுத்துகின்றார், நாமும் இந்த நம்பிக்கையோடு இருப்போம், அவர் உண்மையுள்ளவர், ஒரு போதும் நம்மைக் கைவிட மாட்டார்.
வேதாகமத்தை வாசிக்கும் போது, எப்பொழுது மகிழ்ச்சியைப் பெற்றுக் கொண்டாய்?
தேவன் பேரில் உள்ள தாகத்தையும் பசியையும் பெற்றுக் கொள்ள என்ன செய்யலாம்?
உண்மையுள்ள தேவனே, வேதாகம வார்த்தையின் மூலம் என்னோடு பேசியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். உம்மை உண்மையாய் தேடவும், உமக்கு உத்தமமாய் கீழ்ப்படியவும் எனக்கு உதவியருளும்.