1968 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 3ஆம் நாள் இரவில், முனைவர். மார்டின் லுத்தர் கிங் கடைசி உரையை ஆற்றிய போது, “நான் மலையின் உச்சிக்கு சென்று விட்டேன்” என்றார். அதன் மூலம் அவர் தான் அதிக நாட்கள் வாழப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். மேலும் அவர், “நாம் இன்னமும் கடினமான நாட்களைச் சந்திக்க நேரிடும், ஆயினும் அது என்னை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் நான் மலையின் உச்சியில் இருக்கிறேன், நான் மேலே வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் காண்கின்றேன். நான் உங்களோடு அங்கு செல்வதில்லை……ஆனால் நான் இந்த இரவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நான் எதைக் குறித்தும் கவலைப் படவில்லை, எந்த மனிதனைக் குறித்தும் பயப்படவில்லை, என்னுடைய கண்கள் தேவனுடைய வருகையின் மகிமையைக் கண்டது” என்றார். மறு நாளில் அவர் கொலை செய்யப்பட்டார்.

அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக தன்னுடைய சீஷனான தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப் பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது… இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:6,8) என்கின்றார். இப்பூமியில் அவருடைய வாழ்நாள் நிறைவடையப் போகின்றது என்பதை முனைவர்.கிங் அறிந்திருந்ததைப் போல, பவுலும் அறிந்திருந்தார். இருவருமே வாழ்வில் நம்பமுடியாத அளவு முக்கியத்துவத்தை உணர்ந்த போதும் தங்களுக்கு முன்பாக வைக்கப் பட்டிருந்த நித்திய வாழ்வைக் குறித்த தரிசனத்தைப் பெற்றிருந்தனர். இருவருமே அடுத்தபடியாக தங்களுக்கு நடக்க இருந்ததை வரவேற்றனர்.

இவர்களைப் போன்று நாமும் நம்முடைய கண்களை, “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கி” திருப்புவோமாக, “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18).