ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. அதன் முன் பக்கத்தை “தலை” என்கிறோம், ஏனெனில் ஆதி ரோமர் ஆட்சி காலத்திலிருந்தே நாணயத்தின் முன் பக்கம் அந்த நாட்டின் தலைமையைக் குறிக்கும். அதன் பின் பக்கம் “வால்” எனப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் துவங்கியிருக்கலாம், அந்த நாணயத்தில், ஒரு சிங்கத்தின் வால் உயர்த்தப்பட்ட நிலையில் காட்டப்பட்டிருக்கும்.

ஒரு நாணயத்தைப் போன்று, கெத்செமனே தோட்டத்தில், கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன. இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவு, தன்னுடைய வாழ்வின் துயரம் மிகுந்த நேரத்தில், ஜெபித்தார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” (லூக்.22:42) என்றார். “இந்தப் பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும், அதையே நான் விரும்புகின்றேன்” என்று கிறிஸ்து ஜெபித்திருப்பாரேயானால் அது தான் உண்மையை வெளிப்படுத்தும் ஜெபம், அது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் ஜெபமாயிருந்திருக்கும்.

பின்னர் இயேசு நாணயத்தின் மறு பக்கத்தைத் திருப்புகின்றார், “என்னுடைய சித்தத்தின் படியல்ல” என்று ஜெபிப்பதின் மூலம் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கின்றார். “தேவனே, நீர் என்ன செய்ய விரும்புகின்றீர்?” என்று நாம் கேட்கும் போது, நம்மை அவரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க ஆரம்பிக்கின்றோம்.

இந்த இரு பக்க ஜெபம், மத்தேயு 26, மாற்கு 14 மற்றும் யோவான் 18 ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இயேசு இரு பக்க ஜெபத்தை ஏறெடுத்தார்; இந்த பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும் (தேவனே, இது நான் விரும்புவது), ஆயினும் என்னுடைய விருப்பத்தின் படியல்ல (தேவனே, நீர் என்ன விரும்புகின்றீர்?), இவ்விரண்டிற்கும் இடையே மட்டுமே அவருடைய ஜெபமிருந்தது. இயேசுவின் இரு பக்கங்கள், அவருடைய ஜெபத்தின் இரு பக்கங்கள்.