என் வீட்டின் அருகில் காரை ஓட்டிச் சென்ற போது, எங்களுக்கருகில் வசிக்கும் மிரியாம், மற்றும் அவளுடைய சிறுபெண் குழந்தை எலிசபெத் ஆகியோருக்குக் கையசைத்தேன். கடந்த ஆண்டுகளில், எங்களுடைய சிறிய உரையாடல்கள்- “சில நிமிடங்கள்” என்பதையும் தாண்டி தொடர்ந்து கொண்டேயிருப்பதையும், ஒரு ஜெபக் கூடுகையையும் சமாளித்துக் கொள்ள எலிசபெத் பழகிக் கொண்டாள். நானும் அவளுடைய தாயாரும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவள், எங்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் ஏறி, கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பாள், சற்று நேரத்தில் அந்தக் கிளையிலிருந்து குதித்து, எங்களிடம் ஓடி வருவாள். எங்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு, சிரித்துக் கொண்டே, “இது மீண்டும் ஜெபிக்கும் நேரம்” என்ற பாடலைப் பாடுவாள். நண்பர்களுக்கிடையே ஜெபம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்டதைப் போல, அந்தச் சிறு வயதிலேயே செயல் படுவாள்.

“கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபே. 6:10) என்று விசுவாசிகளை உற்சாகப் படுத்திய அப்போஸ்தலனாகிய பவுல், இடைவிடாத ஜெபத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். ஆவிக்குரிய வாழ்வில் தேவனோடு நடக்கும் போது, அவருடைய பிள்ளைகளுக்குத் தேவையான சர்வாயுதவர்க்கத்தைக் குறித்து விளக்குகின்றார். இவை பாதுகாப்பையும், பகுத்தறியும் ஞானத்தையும், அவருடைய உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும் நமக்குத் தருமென குறிப்பிடுகின்றார் (வச. 11-17). நமக்கு வாழ்வு தரும் ஈவுகளைத் தரும் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்தால் மட்டுமே தேவன் தரும் பெலத்தில் நாம் வளரமுடியும் என அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகின்றார் (வச. 18-20).

நம்முடைய ஜெபங்களில் நாம் கதறினாலும் சரி, மனதுக்குள்ளே புலம்பினாலும் சரி, தேவன் அவற்றைக் கேட்கிறார், நம்மீது கரிசனை கொண்டுள்ளார். அவர் தம்முடைய வல்லமையினால், நம்மை பெலப்படுத்த ஆயத்தமாயிருக்கிறார் எனவே, அவர் நம்மை மீண்டும், மீண்டும், மீண்டும் ஜெபிக்க அழைக்கின்றார்.