பிபிசி வீடியோ காட்சிகளில் வரும் பாலூட்டிகளின் வாழ்க்கை முறை என்ற தொடரில் வரும் தொகுப்பாளர் டேவிட் அட்டன்பரோ என்பவர், வேடிக்கையான முகபாவனையும், கால்களில் மூன்றுவிரல்களையும் கொண்ட ஸ்லாத் கரடியைப் பார்க்கும்படி ஒரு மரக்கிளையில் ஏறினார். உலகிலேயே மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய விலங்கினமான இந்தப் பாலூட்டியை நேருக்கு நேராகச் சந்தித்தார். “பூ.!.” என்ற சத்தத்தை எழுப்பி, அதனை வாழ்த்தினார், ஆனால், அவருக்கு எந்த ஒரு பதிலும் அதனிடமிருந்து கிடைக்கவில்லை. இந்த மூன்று கால்விரல்களைக் கொண்ட ஸ்லாத் விலங்கினங்கள் மிகவும் மெதுவாக இயங்கக் கூடியவை, இவை மிகவும் சத்து குறைவானதும், சீக்கிரத்தில் செறிக்க கூடாததுமான இலைகளையே உண்டு வாழ்கின்றன என்பதாக அவர் விளக்கினார்.
இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நெகேமியா, தாமதிப்பதற்கு மற்றொரு எடுத்துக் காட்டையும், விளக்கத்தையும் தருகின்றார் 9:9-21), ஆனால் இது வேடிக்கையானதல்ல. தாமதிப்பதற்கு, நம்முடைய தேவனாகிய கர்த்தரே ஒரு முழுமையான எடுத்துக் காட்டு, அதுவும் கோபப்படுவதற்கு அவர் தாமதிக்கின்றார் என நெகேமியா கூறுகின்றார். தேவன் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாத்தார், நல் வாழ்வு தரும் கட்டளைகளைக் கொடுத்தார், எகிப்தை விட்டுப் புறப்பட்ட அவருடைய ஜனங்களின் பிரயாணத்தின் போது, அவர்களைத் தாங்கினார், அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தைக் கொடுத்தார் (வச. 9-15) என்பதை நினைவுகூருகின்றார். இஸ்ரவேலர் தொடர்ந்து கலகம் பண்ணிக்கொண்டிருந்தாலும் (வச. 16), தேவன் அவர்கள்மீதுள்ள நேசத்தைக் கைவிடவில்லை. அதனாலேயே நெகேமியா நம்மைப் படைத்தவரைக் குறித்து, “வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையும் உள்ள தேவன்” என்று குறிப்பிடுகின்றார் (வ.17). அவருடைய ஜனங்களின் முறுமுறுப்பு, அவநம்பிக்கை, அவிசுவாசத்தின் மத்தியிலும் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களின் மீது பொறுமையாய் இருக்கக் காரணம் என்ன?(வ.21). அது தேவனுடைய “மிகுந்த மன உருக்கம்” அல்லவோ (வச. 19).
நாம் எப்படி இருக்கின்றோம்? நாம் கோபம் மிகுந்த மனநிலையில் இருப்போமானால், அது நம்முடைய இரக்கமற்ற இருதயத்தைக் காட்டுகின்றது. ஆனால் தேவனுடைய பெருந்தன்மையான இருதயம், நாமும் பொறுமையோடு வாழவும், அவரைப் போன்று நேசிக்கவும் கற்றுத்தருகின்றது.
உன் வாழ்வின் எந்த நேரங்களில் கோபப்படுவதற்கு தாமதிக்கப் பழகிக் கொள்ள வேண்டியுள்ளது? தேவன் உன் மீது கோபப்படுவதற்கு தாமதிக்கிறார் என்பது உனக்கு எப்படித் தோன்றுகின்றது?
பரலோகத் தந்தையே, உம்முடைய கிருபை, இரக்கம், தயவு மற்றும் அன்பினால் எங்களை நிரப்பியருளும், எனவே மற்றவர்கள் எங்களில் குறைகளையல்ல, உம்முடைய அன்பினைக் காணச்செய்தருளும்