சுன்டொகு (Tsundoku) என்ற ஜப்பானிய வார்த்தை எனக்கு மிகவும் தேவையானது! இது நாம் இன்னமும் வாசிக்காமல், படுக்கைக்கு அருகிலுள்ள மேசையில் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைக் குறிக்கும். நாம் கற்றுக்கொள்ளத் தேவையானவற்றைப் புத்தகங்கள் கொடுக்கின்றன, அவை, நம்மை வேறொரு காலத்திற்கும் இடத்திற்கும் கொண்டுசெல்பவை. அவை தரும் மகிழ்ச்சியையும் உட்கருத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு விரும்புகின்றேன், ஆகவே தான் நான் இவற்றை வைத்துள்ளேன்.
புத்தகங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு உதவியாகவும் இருக்கின்றன என்ற உண்மை எல்லா புத்தகங்களுக்கும் மேலான புத்தகமான வேதபுத்தகத்திற்கு மிகப் பொருத்தமானது. இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பைப் பெற்ற புதிய தலைவனான யோசுவாவை தேவன் இந்த நியாயப்பிரமாண புத்தகத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்துவதைப் பார்க்கின்றோம் (யோசு. 1:8).
யோசுவா சந்திக்க இருக்கின்ற கஷ்டங்களை அறிந்த தேவன், அவனிடம், “நான் உன்னோடும் இருப்பேன்” (வச. 5) என்கின்றார். யோசுவா தேவனுடைய நியாயப் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் போது, அவருடைய உதவி அவனுக்குக் கிடைக்கும். தேவன் அவனிடம், “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக” (வச. 8) என்றார். யோசுவா நியாயப்பிரமாணப் புத்தகத்தை வைத்திருந்த போதிலும், அதன் உட்கருத்தையும், தேவன் யார் என்பதையும், அவர் தன்னுடைய ஜனங்களுக்கு வைத்திருக்கின்ற நோக்கத்தையும் அறிந்துகொள்ளும்படி, அதை உண்மையாய் தேட வேண்டுமென தேவன் விரும்புகின்றார்.
உன் வாழ்நாட்களைக் கடந்து செல்வதற்கு உனக்கு அறிவுரை தேவையா? சத்தியம் அவசியமா? ஊக்கம் வேண்டுமா? வேதபுத்தகத்தை வாசிக்க நேரம் செலவிட்டு, அதற்குக் கீழ்ப்படிவாயானால், வாழ்விற்குத் தேவையான பெலனைக் கொடுக்கும் வாசனை நிரம்பிய வார்த்தைகளை அதன் பக்கங்களில் காண்பாய் (2 தீமோ. 3:16,17).
வேதபுத்தகத்தை திறக்க விடாதபடி எந்தெந்த காரியங்கள் உன்னைத் தடைபண்ணுகின்றன? இந்த வாரத்தில் இன்னும் அதிகமாக வேதத்தை வாசிக்கும்படி எப்படி உன்னை தயாரிக்கப் போகின்றாய்?
பரலோகத் தந்தையே, வேதவார்த்தைகளின் மூலம் எங்களை வழி நடத்துவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். நீர் பேசுவதைக் கேட்பதற்கு அதிக ஆவலைத் தந்து உதவியருளும்.