“உனக்கு என்னவாயிற்று?” என்று கேட்டார், நைஜீரியாவைச் சேர்ந்த பீட்டர் என்ற தொழிலதிபர். அவர் லோகாஸ் என்ற இடத்திலுள்ள ஒரு மருத்துவ மனையில், ஒரு படுக்கையில் படுத்திருப்பவரைக் குனிந்து பார்த்தவண்ணம் இவ்வாறு கேட்டார். “யாரோ ஒருவர் என்னைச் சுட்டு விட்டார்” என்றான் அந்த இளைஞன். அவனுடைய தொடையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த இளைஞன் வீட்டிற்கு திரும்பக் கூடிய அளவுக்கு சுகமாகியிருந்தாலும், அவனுடைய பில் தொகையைக் கட்டினால் தான் அவன் அங்கிருந்து விடுவிக்கப் படுவான். அவ்விடத்திலுள்ள அரசு மருத்துவ மனைகள் இத்தகைய ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தன. ஒரு சமுக சேவை செய்பவரைக் கலந்தாலோசித்தபின், பீட்டர் தன் பெயரைத் தெரிவிக்காமல், தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், தான் ஏற்கனவே ஆரம்பித்து வைத்திருந்த தரும நிதியிலிருந்து, அந்த பில்லுக்கான தொகை முழுவதையும் செலுத்திவிட்டார். இந்த ஈவைப் பெற்றவர்கள் ஒரு நாள் தாங்களும் மற்றவர்களுக்கு இத்தகைய ஈவைக் கொடுப்பார்கள் என்று நம்பினார்.
தேவன் நமக்குத் தரும் செல்வத்திலிருந்து கொடுப்பதைக் குறித்து வேதாகமத்தில் அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் எப்படி வாழ வேண்டுமென மோசே கூறும்போது, முதலாவது தேவனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்றார் (உபா. 26:1-3), பின்னர், தேவையிலிருப்போரைக் கவனிக்குமாறு அறிவுறுத்துகிறார், அந்நியருக்கும், திக்கற்ற பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுக்குமாறு கூறுகின்றார் (வ.12). அவர்கள் “பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்” (வச. 15) வாழ்வதால், தேவனுடைய அன்பை தேவையிலிருப்போருக்குக் காட்டுமாறு சொல்கின்றார்.
நாமும் நம்மிடமுள்ள பொருட்களை, சிறிதோ பெரிதோ, பிறரோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தேவனுடைய அன்பை பிறருக்குக் காட்டுவோம். பீட்டர் கொடுத்தது போல நம்மால் நேரடியாக கொடுக்கச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், நாம் தேவனிடம் கேட்போம், நாம் உதவி செய்யத் தேவையானவர்களையும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் தேவன் காட்டும் படி அவரிடம் கேட்போம்.
பீட்டர் மூலமாக உதவி பெற்ற நோயாளிகள் எவ்வாறு உணர்ந்திருப்பார்கள் என்று நீ நினைகின்றாய்? நீயும் எதிர் பாராத விதமாக கிருபையின் ஈவைப் பெறும் போது எவ்வாறு உணர்வாய்?
தேவனே, தேவையிலிருப்போரை நீர் கவனிப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். எனக்கு அருகிலும், தூரத்திலும் பொருளாதாரத்திலும், ஆவியிலும் தேவையிலிருப்போரைக் காணக்கூடியக் கண்களை எனக்குத் தந்தருளும். அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை எனக்குக் காட்டியருளும்.