மேரி இயேசு கிறிஸ்துவை நேசித்த போதிலும், அவளுடைய வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது. அவளுடைய இரண்டு மகன்கள் மரித்து விட்டனர், இரண்டு பேரன்களும் மரித்துப் போயினர், அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர். மேரியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாள். ஆயினும், ஆலய ஆராதனைக்குச் செல்ல முடிந்த போது, அவள் தவறாமல் ஆராதனையில் கலந்து கொண்டு, திக்கு வாயோடு, தேவனைத் துதித்தாள், “என்னுடைய ஆன்மா தேவனை நேசிக்கிறது, அவருடைய நாமம் துதிக்கப் படுவதாக!” என்று ஆராதித்தாள்.
மேரி தேவனை ஆராதிப்பதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே, தாவீது சங்கீதம் 63ஐ எழுதினார். இச்சங்கீதத்தினை அவர் யூதாவின் வனாந்தரங்களிலிருந்து எழுதினார் என்பதை அதன் தலைப்பிலிருந்து அறிகிறோம். அவர் விரும்பத்தகாத இடத்தில் இருந்த போதும், தனித்து விடப்பட்ட போதும் விரக்தியடையவில்லை, ஏனெனில் அவர் நம் தேவனை நம்பிக்கையாகக் கொண்டிருந்தார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” (வச. 1) என்கின்றார்.
ஒரு வேளை நீயும் கஷ்டமான சூழ்நிலைகளில், வழிதெரியாமல், வசதியற்ற இடங்களில் இருக்கலாம். வசதியற்ற சூழல் நம்மைக் குழம்பச் செய்யலாம், ஆனாலும் நம்மை மிகவும் நேசிப்பவரை பற்றிக்கொண்டோமேயானால், நாம் தடுமாறத் தேவையில்லை (வ.3), அவர் நம்மை திருப்தியாக்குபவர் (வ.5), துணையாயிருப்பவர் (வச. 7), அவருடைய வலது கரம் நம்மைத் தாங்குகிறது (வ.8). நமது ஜீவனைப் பார்க்கிலும் அவரது அன்பு பெரிதாகையால், மேரியையும், தாவீதையும் போன்று நாமும், என் ஆத்துமா திருப்தியாகும், என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும் என்று அவரைக் கனப் படுத்துவோமாக (வச. 3-5).
உன்னுடைய வாழ்க்கை வனாந்தரமாகக் காட்சியளிக்கையில், உன்னுடைய எண்ணங்கள் எவ்வாறிருக்கும்? அந்நாட்களில் உன்னை திடப் படுத்திக்கொள்ள, சங்கீதம் 63 எப்படி உதவியாயிருக்கும்?
இயேசுவே, கைவிடப்பட்ட, வறண்ட என் வாழ்க்கையில், என் ஜீவனை காட்டிலும் உமது அன்பு பெரிதாக இருப்பதால், நான் நன்றியோடு உம்மைப் போற்றுகின்றேன்.