பொதுவாக, ஒரு வரைபடத்தைப் பார்த்தால் அதன் மையத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் கணிக்க முடியும். நம்முடைய சிந்தனையில், நாம் வசிக்கும் வீட்டை உலகத்தின் மையமாகக் கருதுவோம். எனவே நாம் நம் இருப்பிடத்தை மையத்தில் புள்ளியிட்டு குறித்துக்கொண்டு, அதிலிருந்து மற்றவற்றை வரைய ஆரம்பிப்போம். அருகிலுள்ள பட்டணங்களைக் குறிப்பிட, வடக்கே 50 மைல் தொலைவிலுள்ளது என்றோ, தெற்கே அரை நாள் வாகனத்தில் செல்லும் தொலைவு என்றோ அனைத்தையும் நாமிருக்கும் இடத்தைக் கொண்டே குறிப்பிடுவோம். பழைய ஏற்பாட்டில் சங்கீதங்களெல்லாம், புவியில் தேவனுடைய இருப்பிடமாகக் கருதப்படும் எருசலேமை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. எனவே வேதாகமத்தின் படி உலகின் மையம் எருசலேம் ஆகும்.
எருசலேமைப் புகழ்ந்து பாடும் அநேக சங்கீதங்களில், சங்கீதம் 48ம் ஒன்று. இந்த “தேவனுடைய நகரம், அவருடைய பரிசுத்த பர்வதம்” “வடிப்பமான ஸ்தானமும், சர்வ பூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது” (வச. 1-2). “அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்”, “தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்” (வ.3,8). தேவனுடைய புகழ்ச்சி எருசலேம் ஆலயத்தில் ஆரம்பித்து, “பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது” (வச. 9-10).
நீ இதனை எருசலேமிலிருந்து வாசித்தால் தான், நீ வேதாகம அடிப்படையில் உலகின் மையத்தில் இருப்பாய். ஆனாலும் நீ இருக்கிற இடம் மிக முக்கியமானது, ஏனெனில் அவருடைய புகழ்ச்சி “ பூமியின் கடையாந்திரங்கள் பரியந்தமும்” (வச. 10) எட்டும் வரை தேவன் ஓய்ந்திருப்பதில்லை. தேவன் தன்னுடைய இலக்கினை அடைவதில் நீயும் பங்கு பெற விரும்புகின்றாயா? தேவனுடைய பிள்ளைகளோடு சேர்ந்து, ஒவ்வொரு வாரமும் அவரை ஆராதனை செய், ஒவ்வொரு நாளும் அவருடைய மகிமைக்கென வாழ். நம்மையும், நமக்குள்ள யாவற்றையும் அவருக்கு அர்ப்பணிக்கும் போது, அவருடைய புகழ்ச்சி “பூமியின் கடையாந்திரங்கள்” மட்டும் எட்டும்.
இந்த வாரத்தில் தேவனுடைய புகழ்ச்சியை எப்படி பரப்பப் போகின்றாய்? வேரென்ன காரியங்களை முயற்சிக்கப் போகின்றாய்?
பிதாவே, உம்முடைய புகழ்ச்சியை பூமியின் கடைசி மட்டும் பரப்புவதற்கு என்னையும் பயன் படுத்தும்.