நான் என் தலையை கரங்களால் தாங்கியவளாய் பெருமூச்சோடு, “நான் எல்லாவற்றையும் எப்படி முடிக்கப்போகின்றேன் என்றே தெரியவில்லை” என்றேன். என்னுடைய சிநேகிதனின் குரல் தொலைபேசியில் கரகரத்தது, “நீ உன்னைப் பாராட்டிக்கொள்ள வேண்டும், நீ நிறைய காரியங்களைச் செய்கின்றாய்” என்றான். அத்தோடு நான் செய்கின்ற காரியங்களைச் சொல்ல ஆரம்பித்தான். ஒரு சுகமான வாழ்க்கையை நடத்துகின்றாய், வேலைக்கு செல்கின்றாய், பள்ளியிலும் சிறப்பாகச் செய்கின்றாய், எழுதுகின்றாய், வேதாகம வகுப்புக்கும் செல்கின்றாய் என்றான். நான் இவற்றையெல்லாம் கர்த்தருக்கென்றே செய்கிறேன், நான் செய்கின்றவற்றில் கவனம் செலுத்துகிறேன், ஆனால் எப்படி செய்கின்றேன் என்பதைக் கவனிப்பதில்லை. ஒரு வேளை நான் அதிகமான காரியங்களைச் செய்ய முயற்சிக்கலாம்.
தங்களுடைய வாழ்வின் மூலம் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென கொலோசே சபை மக்களுக்கு பவுல் அறிவுறுத்துகின்றார். மொத்தத்தில், அனுதினமும் நாம் செய்கின்ற வேலைகளையும் விட அவற்றை எப்படிச் செய்கின்றோம் என்பதே முக்கியமாகும். அவர்கள் தங்களுடைய வேலைகளை, “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” செய்யக்கடவர்கள் என்கின்றார். “ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (வச. 13-14), இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் (வச. 14), நீங்கள் எதைச் செய்தாலும், அதைஎல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (வச. 17). கிறிஸ்துவைப்போல வாழும் போது, நம் வேலையை அதனின்று பிரிக்கமுடியாது.
நாம் செய்கிற வேலை முக்கியமானது தான், ஆனாலும் அதை ஏன், எப்படி, யாருக்காகச் செய்கிறோம் என்பதே மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் நாம் மன அழுத்தத்தோடு வேலை செய்வதையா அல்லது தேவன் மகிமைப் படும்படி வேலைசெய்து, அதில் இயேசு அர்த்தத்தைக் கொடுக்கும்படியாக செய்வதையா எதைத் தேர்ந்து கொள்கின்றோம். இரண்டாவதை நாம் தேர்ந்து கொண்டால், மனதிருப்தியைப் பெற்றுக்கொள்வோம்.
நீ எதற்காக வேலைகளைச் செய்கின்றாய் - கட்டாயத்தினாலா? தேவைக்காகவா? அல்லது தேவ மகிமைக்கென்று செய்கிறாயா? நம்முடைய சாதனைகளைக் காட்டிலும், கிறிஸ்துவுக்காகச் செய்வதே அர்த்தமுள்ளது என்பதைக்குறித்து உன்னுடைய கருத்து என்ன?
இயேசுவே, என்னுடைய சாதனைகளை நிறைவேற்றுவதற்கு மனஅழுத்தம் கொண்டதற்காக உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் தேவமகிமைக்காக காரியங்களைச் செய்ய எனக்குப் பெலன் தந்தருளும்.