தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள ஓர் ஆலயத்தின் விசுவாசிகள், தேவனுடைய அன்பை செயல் முறையில் காண்பிக்க விரும்பினர். அவர்கள் அருகிலுள்ள, இயந்திரம் மூலம் துணி துவைக்கும் இடத்தில் கூடி, தங்களின் சமுதாயத்தில் தேவையுள்ளோருக்கு, துணிகளைத் துவைத்து, மடித்து, அவற்றோடு, சூடான உணவையும், மளிகை சாமான்கள் அடங்கிய பைகளையும் சேர்த்து வழங்கினர்.
இவ்வாறு செய்யும் போது, ஒரு தன்னார்வத் தொண்டர் கண்டுபிடித்தது என்னவெனில், “அம்மக்களோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைப்பதாகவும், அவர்களுடைய கதைகளைக் கேட்க முடிந்ததாகவும்” கூறினார். அவர்கள் இயேசுவோடு சரியான உறவை வைத்திருப்பதால், தங்களுடைய விசுவாசத்தை வாழ்வில் காட்ட விரும்பினர், அன்பான வார்த்தையாலும், அன்பின் செய்கையாலும் மற்றவர்களுக்கு உதவி, அவர்களோடு உண்மையான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர்.
ஒவ்வொரு விசுவாசியினுடைய உண்மையான விசுவாசத்தின் விளைவை, அவர்களுடைய அன்பின் கிரியைகளில் காணலாம் என அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகின்றார். “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” (யாக். 2:17) என்று சொல்கின்றார். நாம் தேவனை விசுவாசிக்கிறோம் என்று அறிக்கையிடும் போது, அவருடைய பிள்ளைகளாகின்றோம், நாம் மற்றவர்களுக்குப் பணிசெய்வதன் மூலம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகிறோம் (வச. 24) ஆவியும், சரீரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல, விசுவாசமும், ஊழியமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன (வச. 26) என கிறிஸ்துவின் வல்லமை நம் மூலமாக, நம்மில் வெளிப்படுவதை அழகாகக் காட்டுகின்றார்.
தேவன் சிலுவையில் வெளிப்படுத்தின தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பினால் முற்றிலும் கழுவப்படும் போது, நம்முடைய உண்மையான விசுவாசம், நாம் முழுமனதோடு பிறருக்குச் செய்யும் அநேகக் கிரியைகளினால் விளங்கும்.
இயேசுகிறிஸ்துவை உண்மையாய் அறிந்துகொள்ள யார், உனக்கு உதவியாக இருந்தார்கள்? இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை, எப்படி அன்பின் வார்த்தைகளாலும், கிரியைகளாலும் காட்டுவாய்?
அன்புள்ள இயேசுவே, உம்முடைய பரிபூரண, சுத்திகரிக்கும் அன்பினால் எங்களுடைய வாழ்வை நிரப்பியருளும், அதனை நாங்கள் மற்றவர்களின் வாழ்வில் கொடுக்க எங்களுக்கு உதவியருளும்.