1944 ஆம் ஆண்டு, கிறிஸ்மஸ் அன்று மாலை, “ஓல்ட் பிரிங்கர்” என்று அழைக்கப்பட்ட ஒரு கைதி, சிறைச்சாலை மருத்துவமனையில், மரிக்கும் தருவாயில், சக கைதிகளால் நடத்தப்படும் எளிய கிறிஸ்மஸ் ஆராதனையை எதிர்பார்த்திருந்தார். அவர், “எப்பொழுது இசை ஆரம்பமாகும்?” என்று வில்லியம் மேக்டோகல் என்ற கைதியிடம் கேட்டார். இவரும் பிரிங்கரோடு, சுமத்ராவிலுள்ள முன்டோக் சிறைச்சாலையில், கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். “சீக்கிரத்தில்” என்றார், மேக்டோயல். “நல்லது, அப்படியானால் நான் அவர்களின் பாடலை, தூதர்களின் பாடலோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்,” என்று மரிக்கும் நிலையிலுள்ள பிரிங்கர் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிங்கர் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு விலகிப் போயிருந்தாலும், கடைசி நாட்களில், அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு, தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார். யாரையும் கசப்பான முகத்தோடு பார்க்கும் அவர், இப்பொழுது புன்முறுவலோடு, “முற்றிலும் மாற்றம் அடைந்தேன்” என்று கூறுவதாக மேக்டோகல் தெரிவித்தார்.
மெலிந்து போன, பதினோரு கைதிகளாலான பாடகர் குழு, பிரிங்கரின் விருப்பப்படி, அமைதியான இரவு (Silent Night) என்ற பாடலைப் பாடி முடித்ததும், பிரிங்கரும் அமைதியாக மரித்தார். அவர் மீண்டும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், இப்பொழுது தேவனோடு பரலோகத்தில் இருப்பார் என்றும், “பிரிங்கருக்கு சாவு என்பது, இனிய கிறிஸ்மஸ் விருந்தாளியாக அமைந்தது” என்றும் மேக்டோகல் கூறினார்.
பிரிங்கர், சாவை எதிர் நோக்கிய விதம், எனக்குச் சிமியோனை நினைவுபடுத்துகின்றது. இந்த பரிசுத்தவானுக்கு, “கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய்” என்று பரிசுத்த ஆவியினாலே அறிவிக்கப் பட்டிருந்தது. (லூக். 2:26) சிமியோன் தேவாலயத்தில் இயேசுவைக் கண்டு, “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்… உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்றார் (வச. 29,32).
பிரிங்கரோடு சேர்ந்து, மிகப் பெரிய கிறிஸ்மஸ் பரிசாக நாம் பெற்றுக்கொள்வதும், பகிர்ந்து கொள்வதும், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தைக் காத்துக் கொள்வதேயாகும்.
பிரிங்கரின் சாவை, விருந்தாளியை வரவேற்கும் நிகழ்வாக மேக்டோயல் பார்க்கின்றதை நீ எப்படி கருதுகின்றாய் ? இயேசு உனக்குள் மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் எப்படி கொண்டு வருகின்றார் ?
இயேசுவே, உம்முடைய மரணம், உயிர்ப்பு மூலம் எங்களுக்குச் சமாதானத்தை கொண்டு வந்ததால், உமக்கு நன்றி கூறுகின்றேன். உம்முடைய ஈவாகிய இரட்சிப்பை யாரிடமாகிலும் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவியருளும்.