டாம், மாற்கு ஆகிய இருவரும் செய்யும் ஊழியம் வாழ்விற்கு புத்துணர்ச்சியைத் தருவதாகவுள்ளது. அவர்கள் காண்பித்த ஒரு வீடியோ படக்காட்சி, இதைத் தெளிவுப் படுத்துகின்றது. திறந்த வெளியில் அமைக்கப் பட்ட ஒரு தூவாலைக் குழாயில் (shower bath tube) வரும், புத்துணர்ச்சிதரும் நீரில், ஏழ்மையில் வாழும் சில குழந்தைகள் முதல் முறையாகக் குளித்து, ஆடிப் பாடி, சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஹைட்டியிலுள்ள ஆலயங்களின் கிணற்று நீரைச் சுத்திகரிப்பதற்கு, வடிப்பான் அமைப்புகளை ஆண்கள் பொருத்திக் கொண்டிருந்தனர். அசுத்தமான நீரைப் பருகுவதன் மூலம் வரும் வியாதிகளிலிருந்து அம்மக்களைக் காப்பற்றி, அவர்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்தனர். சுத்தமான நீரை, அவர்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம், அவர்களுக்கு எதிர் காலத்தின் மீது ஒரு நம்பிக்கையை கொடுத்தனர்.
யோவான் 4 ஆம் அதிகாரத்தில், நம் வாழ்விற்கு, தொடர்ந்து புத்துணர்ச்சியைத் தரக்கூடிய “ஜீவத் தண்ணீரைப்” பற்றி குறிப்பிடுகின்றார். களைப்பாகவும், தாகமாகவும் இருந்த இயேசு, சமாரியா பெண்ணிடம் தண்ணீர் கேட்கின்றார், (வ.4-8). இந்த வேண்டல் ஓர் உரையாடலுக்கு வழி வகுக்கின்றது. அப்பொழுது இயேசு அவளுக்கு “ஜீவத்தண்ணீரைத்” தருவதாக வாக்களிக்கின்றார் (வச. 9-15). “ நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் “ என்றார் (வச. 14).
இந்த ஜீவத்தண்ணீரைப் பற்றி யோவான் பின்னால் விளக்குகின்றார். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்”, என்று இயேசு கூறுகின்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகும் ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார் என்று யோவான் விளக்குகின்றார் (7:37-39).
பரிசுத்த ஆவியின் மூலம், நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, தேவனுடைய அளவில்லாத வல்லமையையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் ஆவியானவர், ஜீவ தண்ணீராக வாழ்ந்து , நம்மை புதுப்பித்து, புத்துணர்ச்சியைத் தருகிறார்.
எவ்வாறு இயேசு உன்னுடைய தாகத்தை ஆவியானவர் மூலம் தீர்க்கின்றார் ? இயேசு உனக்குச் செய்ததை எப்படி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றாய் ?
அன்புள்ள தேவனே, உம்முடைய ஆவியை எங்களுக்குத் தந்தமைக்காக நன்றி கூறுகின்றேன். எங்களுக்குள்ளே கிரியை செய்து, எங்கள் வாழ்வின் மூலம் மற்றவர்களை உமக்கு நேராகவழி நடத்த உதவியருளும்.