என்னுடைய கணவன் டான், புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரென மருத்துவ அறிக்கை தெரிவித்த போது, சுகம் தரும்படி, தேவனிடம் எப்படி கேட்பது சரியாக இருக்கும் என குழம்பிப் போயிருந்தேன். என்னுடைய குறுகிய பார்வையில், இவ்வுலகில் அநேகம் பேர் யுத்தம், பஞ்சம், வறுமை, இயற்கை பேரழிவுகள் என பல்வேறு கொடுமையான துன்பங்களினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் போன்று நாங்களும் உள்ளோம் எனக் கருதினேன். ஒரு நாள் காலை ஜெபத்தில், என்னுடைய கணவன் மிகவும் தாழ்மையாக ஜெபிப்பதைக் கேட்டேன்,” அன்புள்ள தேவனே, தயவாய் என்னுடைய வியாதியை குணமாக்கும்“ என்றார்.
அது மிகவும் எளிமையாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கப்பட்ட ஜெபம். அது, நான் செய்யும் சிக்கலான, நீண்ட ஜெப விண்ணப்பங்களை மாற்றிக்கொள்ளும்படி செய்தது, ஏனெனில் நம் தேவன், உதவி கேட்டு நாம் கெஞ்சும் அழுகையை நன்கு கேட்கிறார். தாவீது கேட்பதைப் போன்று, “திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.” (சங். 6:4) என்போம்.
தாவீதின் ஆத்துமா குழப்பத்திலும், விரக்தியிலும் இருக்கும் போது, இத்தகைய ஜெபத்தையே ஏறெடுக்கின்றார். அவர் எத்தகைய சூழலில் இருக்கின்றார் என்பது இச்சங்கீதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருடைய உண்மையான கதறல், தேவனிடமிருந்து உதவியையும், மீட்பையும் பெற, அவருடைய உள்ளம் வாஞ்சிப்பதைக் காட்டுகின்றது. “என் பெருமூச்சினால் இளைத்துப் போனேன்” என்று எழுதுகின்றார். (வச. 6).
தாவீது, தன்னுடைய தேவைகளை தேவனிடம் எடுத்துச் செல்வதற்கு, தன்னுடைய குறைகளையும், பாவத்தையும் ஒரு தடையாகக் கருதவில்லை. தேவன் ஜெபங்களுக்கு பதில் தரும் முன்பே, அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது. “கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்; கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.” (வச. 8-9) என்கின்றார்.
நம்முடைய குழப்பம், உறுதியற்றத் தன்மையின் மத்தியில், தேவன் அவருடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்கின்றார், விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்கின்றார். அவருடைய உதவி மிகவும் தேவையான போது, அவர் நம்மைக் கேட்க ஆயத்தமாயிருக்கின்றார்.
தேவனிடம் உதவி கேட்பதற்கு, உன்னிடம் தடையாக இருப்பவை எவை? இன்று, தேவனிடமிருந்து என்ன உதவியைக் கேட்கின்றாய்?
அன்புள்ள தேவனே, எங்களுடைய இருதயத்தைச் சுத்தப்படுத்தி, பரத்திலிருந்து நீர் தரும் உதவியைக் கேட்பதற்கு, எங்களுக்கு தைரியத்தைத் தந்தருளும். நீர், எங்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டு பதிலளிக்கின்ற தேவன் என்ற நம்பிக்கையையும் தந்தருளும்.