அபாயச் சங்கு ஒலி, என் காதுகளை பிளக்கும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டேயிருந்த போது, அவசர கால வண்டி ஒன்று வேகமாக, என்னுடைய காரை முந்திக் கொண்டு சென்றது. அதன் பிரகாசமான ஒளி, என்னுடைய காரின் முன் பக்க கண்ணாடி வழியே வந்த போது, அந்த வாகனத்தின் பக்கங்களில் எழுதியிருந்த ”அபாயகரமான பொருட்கள்” என்ற வாசகம் ஒளிர்ந்து, என் கண்களுக்குத் தெரிந்தது. அந்த வாகனம், ஒரு அறிவியல் ஆய்வகத்திற்கு அவசர வேலைக்காக சென்றது. அங்கு, 400 காலன் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டிருந்ததால், அப்பொருளை அகற்றச் சென்றது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். கந்தக அமிலம் தொடுகின்ற யாவற்றையும் அரித்து விடுவதால், அதனை உடனே அகற்ற வேண்டும்.

இந்த புதிய கதையை நான் கேள்விப்பட்ட போது, எனக்குள்ளாக ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு கடுமையான வார்த்தைகளையும் ஒரு சங்கின் வழியாக ஒலித்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். பரிதாபம், என் வீட்டைச் சுற்றிலும் தாங்கொணா சத்தமாயிருக்கும். 

ஏசாயா தீர்க்கன் இத்தகைய ஒரு விழிப்பை, தன்னுடைய பாவத்தைக் குறித்து உணர்கின்றார். அவர், தேவனுடைய மகிமையை ஒரு தரிசனத்தில் பார்த்த போது, தன்னுடைய தகுதியின்மையை உணர்கின்றார். அவர் தன்னைக் குறித்து,” அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்கின்றார், மேலும் அத்தகைய மனுஷர்களின் மத்தியில் வாசம் பண்ணுகின்றேன், (ஏசா. 6:5) எனவும் கூறுகின்றார். உடனே, ஒரு தேவ தூதன் அவனுடைய உதட்டை ஒரு நெருப்புத் தழலால் தொடுகின்றான். அத்தோடு, “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது” என்றான் (வச. 7).

ஒவ்வொரு கணத்திலும், நாம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, பேச்சின் மூலமாகவோ அல்லது எழுத்தின் மூலமாகவோ வெளிப்படுத்துவதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. அவை “அபாயகரமான” வார்த்தைகளா? அல்லது தேவனுடைய மகிமை, நம்மை உணர்த்தி, அவருடைய கிருபை, நம்மை சுகப்படுத்தி, நாம் வெளிப்படுத்தும் எல்லா காரியங்களும் அவரை கனப்படுத்த அமைய, நாம், நம்மை ஒப்புக்கொடுப்போமா?