என்னுடைய சிநேகிதியின் மருத்துவ அறிக்கை, அவளுக்கு புற்று நோய் என்று தெரிவித்த போது, அவளுடைய காரியங்களை ஒழுங்கு படுத்தும் படி மருத்துவர் ஆலோசனை கூறினார். தன்னுடைய கணவனையும்,சிறு குழந்தைகளையும் நினைத்து கவலை கொண்டவளாய், அழுகையோடு என்னை அழைத்தாள். நான், அவளுடைய அவசர ஜெபத் தேவையை என்னுடைய மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்தேன். மற்றொரு மருத்துவர் அவள் நம்பிக்கையை விடாதிருக்குமாறு அவளை ஊக்கப்படுத்தியதோடு, அவருடைய குழுவினர், அவளுக்குத் தேவையான அனைத்து உதவியையும் செய்வதாகவும் வாக்களித்தைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். சில நாட்கள் கடினமானதாக இருந்த போதிலும், தனக்கு எதிராக நடந்த காரியங்களை யெல்லாம் தள்ளி விட்டு, தேவனையே நோக்கிப் பார்த்தாள். தன் நம்பிக்கையை விடாதிருந்தாள்.
என்னுடைய சிநேகிதியின் விடாப்பிடியான நம்பிக்கை, லூக்கா 8ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மனிதரால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணை எனக்கு நினைவு படுத்துகின்றது. பன்னிரண்டு ஆண்டுகளாக சகித்து வந்த வேதனையால் சோர்வுற்று, ஏமாற்றமடைந்து, புறக்கணிக்கப்பட்ட அவள், இயேசுவின் பின் பக்கமாக வந்து, தன் கையை நீட்டி, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவளுடைய விசுவாசத்தினாலும், இயேசுவின் பேரில் கொண்டிருந்த விடாப்பிடியான நம்பிக்கையாலும், மனிதரால் கொடுக்கமுடியாத சுகத்தை, சூழ்நிலைகள் அவளுக்கு எதிராக அமைந்த போதிலும் உடனேப் பெற்றுக் கொண்டாள் (வச. 43-44).
நாம் முடிவில்லாத வேதனைகளை அநுபவித்துக் கொண்டிருக்கலாம், சூழ்நிலைகள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யலாம், காத்திருத்தல் தாங்க முடியாததாக இருக்கலாம், நமக்கு எதிரான காரியங்கள் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டேயிருக்கலாம், நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தும், நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் சுகத்தை இன்னும் பெறாமலிருக்கலாம். எதுவாயினும், இயேசு நம்மை அவரண்டை வரவும், அவர் மீது விசுவாசமாயிருக்கவும் அழைக்கின்றார். அவராலே கூடும் எனவும், அவர் நம்பத்தகுந்தவர், நம்மருகிலிருக்கிறார் என்பதையும் நம்பும் படியும் அழைக்கின்றார்.
உன் வாழ்வில் பல சவால்களைச் சந்தித்த போதும், இயேசுவின் பேரிலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்கின்றாயா? அவர் உனக்கு என்ன நம்பிக்கையை கொடுத்துள்ளார்?
இயேசுவே, நீர் எங்களுக்கு உதவும் படி எங்களுக்கு அருகில் இருக்கின்றீர் என்ற நம்பிக்கையை தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.