ஒரு சாதாரண தொடுதல் தான். ஆனால், அது காலினின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் விசுவாசிகளுக்கு அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கும் பகுதிக்குச் சென்று, தொண்டு செய்யும்படி அவனுடைய குழுவினர் ஆயத்தப்படுகையில், அவனுடைய மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது. அவன் தன் கவலைகளை, அக்குழுவிலுள்ள ஒருவரோடு பகிர்ந்தான். அந்த நண்பன் நின்று, தன் கையை அவன் தோள் மீது வைத்து, அவனை ஊக்கப்படுத்தும் சில வார்தைகளைப் பகிர்ந்து கொண்டான். காலின் ,அந்த தொடுதலை, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைத்துப் பார்க்கின்றான். தேவன் அவனோடு இருக்கிறார் என்ற உண்மை வல்லமையாக அவனுக்குள் கிரியை செய்தது.
இயேசுவுக்கு மிக அன்பான சீடனான யோவான், சுவிசேஷத்தைப் பரப்பியதற்காக நாடு கடத்தப்பட்டு, பத்மு தீவில் தனித்து விடப்பட்டான். அப்பொழுது அவன், “எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்” கேட்டான் (வெளி. 1:10). அதனைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தைக் கண்டான். அப்பொழுது யோவான், “செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தான்” பயந்து நடுங்கிய அந்த வேளையில், ஆறுதலையும், தைரியத்தையும் பெற்றுக்கொண்டு, எழுத ஆரம்பிக் கின்றான். “அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;” (வச. 17) என்றெழுதினான்.
தேவன் நம்முடைய வசதியான வாழ்விலிருந்து நம்மை வெளியே எடுத்து, புதிய காரியங்களைக் காண்பிக்கின்றார், நம்மை வளைய வைத்து, வளரச் செய்கின்றார். நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் தந்து எல்லா சூழ்நிலைகளின் வழியாகவும் கடந்து செல்லப் பண்ணுகின்றார். நம் சோதனைகளின் மத்தியில், நம்மை அவர் தனியே விடுவதில்லை. எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துகின்றார், நம்மை அவருடைய கரங்களில் வைத்துள்ளார்.
தேவன் உன்னை , உன்னுடைய வசதியான வாழ்விலிருந்து எப்படி வெளியே எடுக்கின்றார்? உனக்கு ஆறுதலையும், ஆதரவையும் தரும்படி எந்த நண்பர்களை உனக்கு தந்துள்ளார்?
தேவனே, உம்முடைய பிரசன்னத்தை நான் உணரவும், என்னுடைய பயத்தின் மத்தியில் உம்முடைய தொடுதலை உணரவும் எனக்கு உதவியருளும்.