டோக்கியோ பட்டணத்தில், ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வெளியே, ஹச்சிகோ என்றழைக்கப்பட்ட ,அகிட்டா வகை நாயின் சிலை, நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹச்சிகோ, தனது எஜமானனிடம் காட்டிய மிகச் சிறந்த விசுவாசத்தை அது நினைவு படுத்துகின்றது. அதன் எஜமானன் ஒரு பல்கலைகழகப் பேராசிரியர். அவர் அந்த ரயில் நிலையத்தின் வழியாக அனுதினமும் பிரயாணம் பண்ணினார். ஒவ்வொரு நாள் காலையும் அந்த நாய் அவரோடு ரயில் நிலையத்திற்கு வரும், மீண்டும் மாலை அவரைச் சந்திக்க, அந்த ரயில் வரும் நேரத்திற்கு வந்துவிடும்.
ஒரு நாள் அந்த பேராசிரியர், அந்த ரயில் நிலையத்திற்கு திரும்பி வரவில்லை. அவர் தன் பணியிடத்திலேயே மரித்துப்போனார். அதிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தன் எஞ்சிய வாழ்நாள் முழுதும் ஹச்சிக்கோ ஒவ்வொரு நாள் மாலையும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்துவிடும். ஒவ்வொரு நாளும், எந்தக் காலநிலை இருந்தாலும், தன்னுடைய எஜமானன் திரும்பி வருவதை அந்த நாய் ஆர்வத்தோடு எதிர்பார்த்தது.
தெசலோனிக்கேயரின் விசுவாசத்தை பவுலும் பாராட்டுகின்றார். அவர்களின் “விசுவாசத்தின் கிரியையையும்”, “அன்பின் பிரயாசத்தையும்”, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையின் பொறுமையையும் (1 தெச. 1:2) பாராட்டுகின்றார். மிகுந்த எதிர்ப்புகளின் மத்தியில், அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறையை விட்டு விட்டனர், “இனி வரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” (வச. 9-10) என்று அவர்களைப்பற்றி கூறுகின்றார்
இந்த ஆதி விசுவாசிகள், இரட்சகர் மீது வைத்திருக்கும் விசுவாசமும், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பும், அவர்களை உபத்திரவங்களையும் தாண்டி தங்களுடைய விசுவாசத்தை ஊக்கத்தோடு பகிர்ந்துகொள்ளச் செய்தது. இயேசுவுக்காக வாழ்வதைவிட மேலானது ஒன்றுமில்லை என்பதில் உறுதியாயிருந்தனர். அவர்களை பெலப்படுத்திய அதே பரிசுத்த ஆவியானவர் (வச. 6) நம்மையும் பெலப்படுத்துகின்றார். இயேசுவுக்காக ஊழியம் செய்துகொண்டே, அவருடைய வருகையையும் எதிர்பார்த்திருப்பது எத்தனை நன்மையானது.
இயேசுவோடு வாழப்போகிறோம் என்பதை நீ எவ்வாறு எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றாய்?
அன்புள்ள இரட்சகரே, நான் உறுதியோடும், உற்சாக மனதோடும் உமக்கு காத்திருக்க எனக்கு உதவியருளும் (சங். 27;14).