கிளெனிஸ் நெல்லிஸ்ட் எழுதிய “தேவனுடைய அன்புக் கடிதங்கள்” என்ற புத்தகங்கள் குழந்தைகளைத் தனிப்பட்ட முறையில் தேவனோடு ஆழமாக உறவாட அழைக்கின்றன. இந்தப் புத்தகங்களில் வரும் ஒவ்வொரு வேதாகமக் கதைக்கும் பின்னால், தேவனுடைய செய்தி என்ற பகுதியில் குழந்தைகள் தங்களுடைய பெயரை எழுதுவதற்கான இடம் விடப்பட்டிருக்கும். வேதாகமச் சத்தியங்களை, இளம் வாசகர்கள் தங்களுடையதாக்கிக் கொள்ளும்போது, வேதாகமம் வெறும் கதையல்ல என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தேவன் அவர்கள் ஒவ்வொருவரோடும் உறவு வைத்துக் கொள்கின்றார், தான் மிகவும் நேசிக்கும் குழந்தைகளோடு வேதாகமத்தின் மூலம் பேசுகின்றார் என்பதையும் கற்றுக் கொள்கின்றனர்.

நான் இந்த புத்தகத்தை என்னுடைய உறவினரின் குழந்தைக்காக வாங்கி அதில், தேவனுடைய செய்தி என்ற பகுதியில் அவனுடைய பெயரை எழுதினேன். தன்னுடைய பெயரைப் பார்த்ததும் அவன் வெகுவாக மகிழ்ந்தான் அவன், “தேவன் என்னையும் நேசிக்கிறார்!” என்றான். நம் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருக்கின்ற நம்முடைய படைப்பின் கர்த்தாவைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து கொள்வது எத்தனை ஆறுதலாகவுள்ளது.

தீர்க்கதரிசி ஏசாயாவின் மூலம் தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசிய போது, அவர்களின் கவனத்தை வானத்துக்கு நேராகத்திருப்புகின்றார். தேவன் வானத்திலுள்ள அனைத்து விண் மீன்களையும் கட்டுப் படுத்துகின்றார். அவற்றைப் பெயரிட்டு அழைக்கின்றார் (ஏசா. 40:26). ஒவ்வொரு விண் மீனுக்கும் தனிப்பட்ட மதிப்பை நிர்ணயிக்கின்றார், ஒவ்வொன்றையும் அன்போடு வழிநடத்துகிறார். அவர் தன்னுடைய ஜனங்களில் ஒருவரையும் மறப்பதில்லை, விட்டு விலகுவதுமில்லை அவர் உருவாக்கிய ஒவ்வொரு அன்பு குழந்தையையும் ஒரு நோக்கத்தோடு உருவாக்கியுள்ளார். அவர்கள் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளார். 

சர்வவல்ல தேவன், நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தங்களையும், அவர் நம்மீது வைத்துள்ள அன்பையும் வேதாகமம் நமக்குக் காட்டுகின்றது .நாம் நமது பெயரை அவற்றில் எழுதிக் கொள்ளலாம். அந்தக் குழந்தை மகிழ்ந்து கூறியது போல நாமும் “தேவன் என்னையும் நேசிக்கின்றார்” என்று நம்பிக்கையோடு சொல்லுவோம்.