அலி ஓர் அழகிய, புத்திசாலியான, திறமைகள் வாய்ந்த வாலிபப் பெண். அன்பான பெற்றோரைக் கொண்டவள். அவளுடைய உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் அவளுக்குள் ஏதோவொன்று, ஹெராயின் என்ற போதைப் பொருளை எடுத்துக் கொள்ளுமாறு தூண்டிக் கொண்டேயிருந்தது. அவளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை அவளுடைய பெற்றோரும் கவனித்தனர். அவளை ஒரு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த போதை வஸ்து அவளுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை, அவள் ஒத்துக் கொண்டாள். அங்கு அவள் சிகிச்சையை முடித்த பின்னர், அவளுடைய சிநேகிதிகளுக்கு போதைப் பொருளைக் குறித்து என்ன செய்தியைக் கொடுக்கப் போகின்றாளெனக் கேட்டபோது, அவள், “உடனே திரும்பி ஓடு, என்பதே” என்றாள். வெறுமனே “இல்லை” எனக் கூறுவது போதாது, திரும்பி ஓடிவிட வேண்டுமென்றாள்.

ஆனால் அலி மீண்டும் தன் பழைய போதைப் பழக்கத்திற்குத் திரும்பினாள். அதிகப் படியான போதைப் பொருட்களை எடுத்ததால், தனது இருபத்திரண்டாம் வயதில் மரித்துப் போனாள். மனமுடைந்த அவளுடைய பெற்றோர், இத்தகைய முடிவுக்குள்ளாக மற்றவர்களும் போய் விடாதபடி முயற்சி எடுத்து, ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு வந்திருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த செய்தி, “அலிக்காக ஓடுங்கள்”, போதை வஸ்துக்கள் போன்ற அபாயங்களிலிருந்து வெகு தூரம் விலகி ஓடுங்கள் என்று தெரிவித்தனர்.

ஆவிக்குரிய மகனாகிய தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலனாகிய பவுல் தீமையை விட்டு விலகி ஓடும்படி கூறுகின்றார்  (2 தீமோ.த்தேயு 2::22). அப்போஸ்தலனாகிய பேதுருவும் இதனையே, “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” (1 பேது. 5:8-9) என்று கூறுகின்றார்.

நம்மில் ஒருவருமே சோதனைகளுக்கு விலக்கப் பட்டவர்களல்ல. ஆனால் அதனை மேற் கொள்ளும் சிறந்த வழி – அப்படிப் பட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து விடுதலேயாகும். ஒரு வேளை அதனை எப்பொழுதும் தவிர்க்கக் கூடாததாகயிருப்பின் தேவன் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையோடு வேதத்தில் கூறப் பட்டுள்ளபடி ஜெபத்தின் மூலம் பெலன் பெற்றுக் கொள்வோம். “நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்தால், எப்பொழுது திரும்பி அவரிடம் ஓடி வர வேண்டுமெனத் தெரிந்து கொள்வோம்.”