அந்த நாளின், அதிக வேலைகளை முடித்த பின்னர் ஷர்லி சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்த போது, அங்கு ஒரு வயதான தம்பதியர், அங்கிருந்த மைதானத்தில் “இலவசம்” என எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்த பழைய வேலியின் ஒரு பகுதியை எடுத்துச் செல்ல தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஷர்லி தன் கணவனை அழைத்துக் கொண்டு வெளியே அவர்களுக்கு உதவும் படிச் சென்றாள். அவர்கள் நால்வரும் போராடி அந்த வேலியின் ஒரு பகுதியை கை வண்டியிலேற்றி, தெரு வழியே, காண்போர் சிரிக்கும் வகையில் உருட்டிச் சென்று தெரு முனையிலுள்ள அந்த தம்பதியினரின் வீட்டிலிறக்கி விட்டு மீண்டும் மற்றப் பகுதியையெடுக்க திரும்பினர். அப்பொழுது அந்த பெண்மணி ஷர்லியிடம் “நீ என்னுடைய சிநேகிதியாக இருப்பாயா?” எனக் கேட்டாள். “ஆம், இருப்பேன்” என பதிலளித்தாள். அந்தப் பெண் வியட்நாமைச் சேர்ந்தவளெனவும், அவளுக்கு சிறிதே ஆங்கிலம் தெரியுமெனவும், அவர்களுடைய பிள்ளைகளனைவரும் தூர இடங்களிலிருப்பதால் இவர்கள் தனிமையாக இருக்கின்றனர் என்றும் பின்னர் தெரிந்து கொண்டாள்.
அந்நியராயிருப்பது எவ்வாறிருக்கும் என்பதை இஸ்ரவேலர் அறிவார்கள், என லேவியராகமத்தில் தேவன் குறிப்பிடுகின்றார் (19:34). அந்நியரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றார்
(வச. 9-19). தேவன் அவர்களை தன்னுடைய சொந்த ஜனங்களாகப் பாவித்திருக்கின்றபடியால், அவர்கள் தங்கள் சுற்றத்தாரை ஆசீர்வதிக்க வேண்டுமெனவும், தங்களிடம் அன்பு கூறுவது போல அவர்களிடமும் அன்பு கூர வேண்டுமெனவும் விரும்புகின்றார். எல்லா ஜனத்திற்கும் ஆசீர்வாதமாக தேவன் இயேசுவைத் தந்தார். அவர் தந்தையின் வார்த்தைகளை நம் எல்லாருக்கும் மீண்டும் எடுத்துரைத்தார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்… அன்பு கூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத். 22:37-39) என்றார்.
நம்மிலே வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவியினால் நாம் தேவனையும், பிறரையும் நேசிக்க முடியும். ஏனெனில் அவரே முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். (கலாத்தியர் 5:22-23, 1யோவான் 4:19) நாமும் ஷர்லியோடு சேர்ந்து “நான் செய்வேன்” என்று கூறுவோமா?
நீ தனிமையாக உணர்ந்த போது யாரேனும் உனக்கு உதவினார்களா? இந்த வாரத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பை யாரிடம் காட்டப் போகின்றாய்?
தேவனே, நீர் எனக்கு காட்டிய அன்பிற்காக நன்றி கூறுகிறேன். உம்முடைய நாமம் மகிமைபடும் படி, நான் மற்றவர்களை நேசிக்க, பரிசுத்த ஆவியானவர் என்னில் கிரியை செய்வாராக.