அவளுடைய பெயர் சரெலின். என்னுடைய பள்ளிப் படிப்பு நாட்களில் அவள் மேல் எனக்கு விருப்பம் இருந்தது. அவளுடைய சிரிப்பு மிகவும் அற்புதமாயிருக்கும். எனக்கிருந்த விருப்பத்தை அவளும் அறிந்திருந்தாளா என்பது எனக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியுமென்றுதான் நான் நினைத்தேன். எங்களுடைய படிப்பை முடித்ததும் அவளுடைய தொடர்பும் விட்டுப் போனது. எங்களுடைய வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் செல்ல நேர்ந்தது.
ஆனாலும் எங்களோடு பட்டம் பெற்றவர்களோடு இணைய தளத்தில் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் சரெலின் மரித்துவிட்டாளென கேள்விப்பட்ட போது மிகவும் வருத்தப்பட்டேன். அவளுடைய வாழ்க்கை, கடந்த வருடங்களில் எப்படி போய்க் கொண்டிருந்தது என்பதைக் குறித்து மிகவும் ஆச்சரியப் பட்டேன். நாமும் முதிர்வயதை எட்டும்போது நம்முடைய உறவினரையும் நண்பர்களையும் இழப்பது என்பது அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றது. நம்மில் அநேகர் அதனைக் குறித்துப் பேசுவதை விரும்புவதில்லை.
இப்படி நாம் வருத்தத்தில் இருக்கும்போது, இறப்பு என்பது ஒரு முடிவல்ல என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது (1 கொரி. 15:54-55). இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, உயிர்த்தெழுதலைக் குறித்தும் அவர் எழுதுகின்றார். பவுலும் இந்த நம்பிக்கையை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பே பெற்றுக் கொண்டார் (வச. 12). எனவே, “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (வச. 14) என்கிறார். விசுவாசிகளாகிய நாம் இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். (வச. 19)
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களை, (வச. 18) – நம்முடைய பாட்டி, தாத்தா, பெற்றோர், நண்பர்கள், உற்றார், அருகிலுள்ளோர் மற்றும் பள்ளி நாட்களில் நாம் விரும்பியவர்களையும் கூட மீண்டும் ஒரு நாள் காண்போம். மரணம் என்பது கடைசி வார்த்தையல்ல, உயிர்த்தெழுதலே கடைசி வார்த்தை.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உனக்கு என்ன செய்தியைத் தருகின்றது? உன்னுடைய விசுவாசத்தை யாரிடம் வெளிப்படுத்தி அவர்களுக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைச் சுட்டிக் காட்ட முடியும்?
இயேசுவே, உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை, நான் என் வாழ்வில் என் வார்த்தையினாலும், செயலினாலும் உம்மை அறியாதவர்களுக்கு காட்ட உதவியருளும்.