எங்களோடு கல்லூரியில் பயின்றவர்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்திக்கும்படி என் மனைவி கேரியும் நானும் சமீபத்தில் கலிபோர்னியாவிலுள்ள சான்டா பார்பரா என்ற இடத்திற்குச் சென்றிருந்தோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டணத்தில் தான் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து நேசிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய வாலிபவயதில், எஙகளுடைய சிறந்த நேரங்களைச் செலவிட்ட சில இடங்களைப் பார்க்கும்படியாகத் திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கு மிகவும் விருப்பமானமெக்ஸிக்கன் சிற்றுண்டிச்சாலை இருந்த இடத்தை அடைந்தபோது, அவ்விடத்தில் கட்டடப்பொருட்கள் விற்கும் கடையிருப்பதைக் கண்டோம். அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஓர் இரும்புதகட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம், அங்கிருந்த சிற்றுண்டிச்சாலை நாற்பது ஆண்டுகள் அந்தச் சமுதாயத்தினருக்குச் சேவை செய்ததை நினைவுபடுத்தியது.
ஒரு காலத்தில் வண்ண மேசைகளாலும் நிழற்குடைகளாலும் நிரம்பியிருந்த நடைபாதை இப்பொழுது வெறுமையான பாதையாயிருந்தது. நம்மைசுற்றியுள்ள அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டன. அத்தகைய மாற்றங்களின் மத்தியில் தேவனுடைய உண்மைமட்டும் மாறவில்லை. தாவீதும் இதனையே “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது (சங். 103:15-17).தாவீது இச்சங்கீதத்தை, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி” என்ற வார்த்தைகளோடு முடிக்கின்றார்.
பண்டை கால தத்துவஞானி ஹெராகிளிடஸ் என்பவர் “நீ ஒரு முறை கால் வைத்த அதே ஆற்றில் இன்னொரு முறை கால் வைக்கமுடியாது” (ஓடும் ஆற்றில் தண்ணீர் ஓடி மாறுவதால் அதே நீரில்)என்கிறார். வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், தேவன் என்றும் மாறாதவராயும் ,தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற என்றும் நம்பிக்கைக்குரியவராயிருக்குக்கிறார். தலைமுறை தலைமுறையாக அவருடைய உண்மையும் அன்பும் மாறாமல் நிலைத்திருக்கின்றது.
தேவன் என்றும் மாறாதவர் என்று தெரிந்துகொள்வது எத்தனை ஆறுதலாகவுள்ளது.
இந்த உறுதியை நீ எப்பொழுது நன்கு உணர்ந்தாய்?
சர்வ வல்ல தேவனே, நீர் எப்பொழுதும் மாறாதவராயும் நம்பிக்கைக்குரியவராயும் இருப்பதால் நன்றி கூறுகின்றேன். உம்முடைய அன்பையும் உண்மையையும் சார்ந்து நான் வாழ எனக்குதவியருளும்.