பழைய இருசக்கர வாகனங்களின் கடையானது எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிறது. அதில் சில தன்னார்வலர்கள், பழைய சைக்கிள்களைப் புதுப்பித்து அவைகளைத் தேவையுள்ளவர்களுக்கு வழங்குவார்கள். இந்த கடையின் உரிமையாளரான எர்னி கிளார்க் அவர்களும் பழைய இருசக்கர வாகனங்களை பழுது நீக்கி பல பெரியவர்களுக்கு இலவசமாக வழங்குவார். அதில் தங்கள் வாழ்க்கையை நடத்த கஷ்டப்படும் வீடற்றோர், ஊனமுற்றோர், இராணுவ ஓய்வுபெற்ற வீரர்களும் அடங்குவர். இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பல சமயங்களில் அவைகளைப் பயன்படுத்துகிறவர்களும் இரண்டாவது வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஒரு சமயம் ஒரு வீரன் தன்னுடைய நேர்முகத்தேர்விற்கு செல்ல அத்தகைய ஒரு வாகனத்தை பயன்படுத்தினார்.
இரண்டாவது வாய்ப்புகள் அதுவும் தேவனிடத்திலிருந்து வரும்பொழுது ஒரு மனிதனை முற்றிலும் மாற்றக்கூடிய வலிமையுடையது. இஸ்ரவேல் தேசமானது, லஞ்சம் மோசடி மற்றும் பல வகையான பெரும் பாவங்களில் நிறைந்திருக்கும்பொழுது, தேவன் கொடுத்த கிருபையினை மீகா கண்டு கொள்ளுகிறார். மீகா, ‘தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை”, எனப் புலம்புகிறார் (மீகா 7:2).
தேவன் தீமையை சரியான வகையில் நியாயம் தீர்ப்பார். என்பது மீகாவிற்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவருடைய அன்பின் நிமித்தமாக, மனந்திரும்புகிற எல்லாருக்கும் அவர் மறு வாய்ப்பினை அளிக்கிறார். அந்த அன்பினாலே ஆட்கொள்ளப்பட்டவராய், மீகா, ‘தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பானவர் யார்?”(வச. 18).
நாம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டால், நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் ஒதுக்கப்படாதபடி, தேவனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கக்கூடும். மீகா கூறின விதமாக, ‘அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிட்டார்” (வச. 19). அவரைத் தேடுகிற யாவருக்கும் தேவனுடைய அன்பானது இரண்டாவது வாய்ப்பினை அருளுகிறது.
தேவன் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை இன்று உங்களால் பிரதிபலிக்க கூடுமா? என்ன பாவத்தை அறிக்கையிட்டு நம்முடைய தேவனுடைய இரண்டாவது வாய்ப்பினை பெற்றுக் கொள்வீர்கள்?
பரலோகத் தகப்பனே! இரண்டாவது வாய்ப்பினை எங்களுக்கு அருளும் உம்முடைய கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம்.